1/20/2005

வெங்கட் சாமிநாதன் - சில அதிர்வுகள்

ஜுன் 05, 2004 ரொறன்ரோவில் இடம்பெற்ற வெங்கட்சாமிநாதனின் கருத்தரங்கில் அவருடனான உரையாடல் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது. போகும் போதே கேள்வியால் அவரை மடக்க வேண்டும் என்ற எந்த உந்துதலுமின்றி,இரவு வேலையால் வந்து பின் நித்திரையின்றி அவரின் கருத்தரங்கு போவது என்றால் எதை யோசிக்கத் தோன்றும், கெதியாக முடிந்தால் பறுவாயில்லை என்பதைத் தவிர வேறெதுவுமே இருக்கவில்லை. கேள்வியின்றி எதிர்பார்ப்பின்றி போனதால் அவரை, கேட்கப்பட்ட கேள்விகளை என்று விமர்சனபூர்வமாய் பார்க்க முடிந்தது. நிகழ்வு முடிந்து வீட்ட வந்த பின்பும்கூட எந்த எரிச்சலும் அவர்பாலோ அவர் கருத்தாலோ ஏற்படவில்லை. இதை எழுதும் இந்தக் கணம் கூட எல்லோரும் எதிர்ப்பதால் நான் மட்டும் வித்தியாசப்பட வேண்டும் என்ற அந்த வரட்சியான விமர்சனப்பாங்கின்றி என் எண்ணத்தை பகிர வேண்டும் என்றே உணர்கிறேன்.

வெ.சாவை திரு ஞானம் லம்பேட் அவர்கள் அழைத்த போதே நீண்ட ஓர் பேச்சை எதிர்பார்த்துக் கொஞ்சம் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தேன். பொதுவாகவே இந்த மைக்கைக் கண்டாலே ஒரு எரிச்சல். அதுக்கு முன்னால போனாலே ஒரு பெரிய மனித தோரணை வந்துவிடுகிறது. இந்த மைக் வியாதியால்; என்னைப்போன்ற வேலையால் வந்திருக்கிறவர்களின் நிலமை படு மோசம். வெங்கட்சாமிநாதனோ நாங்கள் கருத்துப்பரிமாறிக் கொள்வோம் என்று தன்னுடன் உரையாட அழைத்தார் வந்திருந்த இலக்கிய ஆர்வலர்களை. அது புது விதமாய் இருந்தது. நான் பேசுகிறேன் நீ கேள் என்பது மாதிரியான எமது இலக்கிய உரையாடல்களிலிருந்து இது வேறுபட்டிருந்தது. வந்தவர்கள் எல்லோரும் மிக நீண்ட பேச்சையே எதிர்பார்த்திருந்தார்கள். சப்பென்று போனது. அது என்னவோ தெரியவில்லை தமிழ்நாட்டுப் படைப்பாளிகள் என்றால் நிறையப் பேசவேண்டும். அடிக்கடி தத்துவங்களை உதிர்க்க வேண்டும். எல்லாத்துக்கும் உச்சமாக உங்களைப் போல வருமா என்று சொல்லவேண்டும். இது எதுவுமற்று பேசுவதற்காக தம்மை அழைத்தவரை எப்படி பெரிய ஆளாய் தங்களின் குருவாய் ஏற்றுக் கொள்ளுவது? கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளைப் பார்ப்போம்.

கேள்வி: இப்ப வாற கதையள்ள எது சிறந்த கதை எண்டு நீங்கள் நினைக்கிறிங்கள்?
பதில்: நீங்கள் என்ன கதை நல்லா இருக்கெண்டு நினைக்கிறியள்? என்ர அபிப்பிராயம் என்ன முக்கியமா?
கேள்வி: நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
இப்படி விடாப்பிடியான கேள்வியால் எதை அவரிடம் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. மிகவும் சலிப்பாகவும் இருந்தது. அவர் ஒரு விமர்சகர் அவர் கருத்துக்களை அவர் தனது புத்தகங்களில் சொல்லியிருக்கிறார் அதை விட தனிப்பட்ட அவரது கருத்து எத்தகைய மாற்றத்தை இவர்களிடத்தே ஏற்படுத்தப் போகிறது. இப்படி கேள்விகளை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள்.
கேள்வி 2: ஏன் ஈழத்து எழுத்துக்களைப் பற்றி தமிழ் நாட்டில் அக்கறையிருப்பதில்லை. பின்னிருந்து ஒரு குரல் ‘தமிழ் நாட்டாரின் அங்கீகாரம் தேவையா என்ன.’ என்ன கேள்வி இது. ஏன் அவர்கள் எங்களை அங்கீகரிக்க வேண்டும். இது ஒரு மிக மேம்போக்கான படைப்புக்கு பிரபலமான ஒருவரிடம் முன்னுரை எடுத்துவிட்டால் சரி என்பது போன்ற குறுக்கு வழி. ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளைப்; பற்றி அவரிடம் கேட்பவர்கள் தாங்கள் எவ்வளவு தூரம் அவர்களைப்ற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று யோசிப்பதில்லை. அவர்கள் வந்து சொன்னால் தான் ஓர் ஈழப் படைப்பாளியே தெரிய வருவது எத்தனை துரதிஸ்டமானது. அவர் நம்புகிற விடயத்தை சொல்வதற்கான சுதந்திரத்தை நாம் ஏன் வழங்குவதில்லை. வந்திருந்தவர்கள் எல்லோருக்கும் அவர் நம்புகிற பெண்ணியம் மற்றும் எழுத்தாளர்கள் தொடர்பான கருத்தாடல்களை மாற்றுவதே எண்ணமாயிருந்தது. ஒரு பெண்ணியவாதியிடம் நீங்கள் ஏன் ஆண்களை எதிர்க்கிறீர்கள் என்று கேட்பது போன்ற அபத்தமான கேள்விகளையே வந்திருந்த பெண்களும் அவரின் பெண்களுக்கெதிரான சிந்தனை சார்பாய்க் கேட்டார்கள். அவரின் தீர்மானமான நம்பிக்கையை மாற்றுவது எமது நோக்கமல்லை, எமது கருத்தை சொல்வதோடு நிப்பாட்டியிருக்க வேண்டும் அதற்கான பக்குவம் இருபக்கமும் இருக்கவில்லை. தங்களுக்கு எதிரானவராய் ஏன் அவரை நினைக்க வேண்டும்? அம்பை தனது படைப்பு வெளிவரவேண்டும் என்று ஆசைப்பட்டு டெல்லியில் தன் வீடு வந்து வெங்கட் சாமிநாதன் தன் படைப்பை எடுத்துப் போவதாய் எழுதியிருக்கிறார்.

கனடாவுக்கு வருவதற்க்கு முன் ஆண் பெண் என்று எழுத்தாளர்களைப் பற்றி பிரித்து அறிந்து வந்து அவர் சிலாகிக்கவில்லை. பெண்ணியத்தைப்பற்றி சுமதி ரூபன் அவர்கள் கேட்ட போது, “நீங்கள் எழுதுபவை தான் பெண்ணியக் கருத்துக்கள்” என்றிருந்தால் அவர் ஆறியிருக்கக் கூடும். இந்த மாதிரியான சு10ழலில் யாரை விமர்சிப்பது? என்னளவில் எனது விமர்சனம்,கோபம் எங்களிடமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் அதன் பின் தான் ஜெயமோகன் போன்றோரைப்பற்றி விமர்சிக்க வேண்டும்.
மிகவும் தனிப்பட்ட கேள்விகளை கேட்டு ஒருவரை அறிந்து கொள்ள முனைவது என்பது இயலாத காரியம்.


0
காலம் இதழ்-22 கிடைத்தது. அதில் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் கனடா இலக்கிய நண்பர்களைப் பற்றி எழுதியிருந்தார் அதில் உள்ள உண்மையை அவர்கள் எடுத்துக்கொள்வார்களா என்பது தெரியவில்லை. என்னைப்பற்றி எழுதவில்லை என்று எல்லோருமே தட்டிக் கொள்ளலாம். அவர் சொல்லியிருந்தார் “ஈழத்து எழுத்தாளர்களுக்கு வேண்டாத ஆசைகள், வேண்டாத அங்கீகாரங்களில் பெருமை கொள்ளும் போக்கும் எனக்கு சிலசமயங்களில் வேடிக்கையாய்த் தோன்றும்.” அங்கிருந்து வரும் படைப்பாளிகளை காக்கா பிடிப்பதுää தங்களைப் பற்றி எழுதத் தூண்டுவது போன்றவைகளைக் கொண்டு அவர் இப்படிச் சொல்கிறார். இந்த மாதிரியான போக்கு மிகவும் அருவருப்பான உணர்வை உண்டு பண்ணுகிறது. இது எம்மிடையே மலிந்து கிடக்கிறது.

கடைசியாக வெங்கட் சாமிநாதன்,“யூமாவாசுகி, சோ.தருமன், பெருமாள் முருகன, இமையம் போன்றோர் என்னைக் கவர்ந்த அளவு அவர்களைக் கவரவில்லையோ என்னவோ, ஈழத்தமிழர்களிடையே கூட, மிகக் குறைவாகவே எழுதியுள்ள குந்தவை பற்றிக் கூட நான் எண்ணும் அளவுக்கு அவர்கள் எண்ணவில்லையோ” என்கிறார். தான் சந்தித்து பேசிய கொஞ்ச பேருக்குத் தெரியாததால் ஈழத்து படைப்பாளிகள் யாருக்குமே அவர்களைத் தெரியாது என்று சொல்லி விட முடியாது. அந்தந்தக் காலத்தில், பேசப்படுகிற குறிப்பிட்ட சிலரை மட்டுமே வாசிப்பவர்களையே வெ.சா சந்தித்துள்ளார். பரந்த வாசிப்பும் திறனாய்வும் கொண்ட பலர் விமர்சனம் வைப்பதில்லை.
ஈழத்தமிழ் இலக்கிய விமர்சகர்கள் கூட நீண்ட காலமாக கவிதையில் ஜெயபாலன், சேரன், வில்வரத்தினம், மு.போ, சோலைக்கிளி, மற்றும் பெண்களில் ஊர்வசி, ஒளவை மற்றும் சங்கரி என்ற குறிப்பிட்ட வட்டம் தாண்டி இன்னும் வரவில்லை. சிறுகதையில் உமாவரதராஜன், சட்டநாதன், ரஞ்சகுமார் எனக்குத் தெரிந்து கடந்த 10 வருடங்களில் இவர்களில் யாரும் சிறுகதை எழுதிப் பார்த்ததில்லை. இப்படி ஒரு மேம்போக்கான சுழலில் என்னத்தை அல்லது யாரை விமர்சிப்பது? மிகவும் சலிப்புத் தான் மிஞ்சுகிறது.

Comments on "வெங்கட் சாமிநாதன் - சில அதிர்வுகள்"

 

Blogger -/பெயரிலி. said ... (6:33 p.m.) : 

This comment has been removed by a blog administrator.

 

Anonymous Anonymous said ... (7:33 a.m.) : 

Who let the dog out?

It wasn't me.

- A Tamil dog.

 

Blogger Kangs(கங்கா) said ... (4:25 p.m.) : 

ஏதோ பாதி புரிகிறது. முற்றும் புரிய வில்லை.

 

post a comment