2/24/2005

'கற்பை' அழித்தல்

தொடர்ச்சியாக, ஈழப்போராட்டத்தால், பெண்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையால், 'கற்பழிப்பு’ போன்ற சொற்கள் தரும் அதி உச்ச வன்முறையை பெண்களின் மீதான ஒடுக்குமுறையை தவிர்க்க பாலியல்வல்லுறவு, பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்புணர்ச்சி போன்ற சொற்கள் உபயோகிக்கப்பட்டன. பின்னர் பாலியல் வல்லுறவு என்ற சொல்லில் உறவு என்பது உறவை குறிக்கும் என்பதால் அதுவும் தவிர்க்கப்பட்டு பாலியல் வன்புணர்ச்சி மற்றும் பாலியல் வன்முறை போன்ற சொற்களே பாவனைக்கு வந்தன. பெண்ணியத்தில் இவை முக்கியமான மாற்றங்கள். இன்று வெகுஜன பத்திரிகைகள் முதல் தொலைக்காட்சி வானொலி என்று இலங்கை மற்றும் புலம்பெயர் தேசங்களில் -பெரும்பாலும்- கற்பழிப்பு என்ற சொல் பாவனையில் இல்லை அதற்குப் பதிலாய் மேற்குறிப்பிட்ட சொற்களே உபயோகப்படுத்துகிறார்கள்.
‘அழகிய(!) இளம் பெண் கற்பழிக்கப்பட்டாள்’ என்று எழுதும் அதீத புனைவுகளை தவிர்க்கவும் ‘பலாத்காரம்’ என்பது அழகு மற்றும் இன்ன பிற காரணங்களால் நடாத்தப்படுவதல்ல, அது அவர்கள் மீதான வன்முறை என்பதை அழுத்திச் சொல்லவும் இச் சொல் தேவையாய் இருக்கிறது.
அரசியற் காரணங்களால் பெண்களும் குழந்தைகளுமே அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அத்துமீறி பெண்கள் மீது திணிக்கப்படும் ஆயுதமாய் குறி இருக்கிறது. இலங்கையில் க்ருசாந்தி, கோணேஸ்வரி; போன்றவர்களின் மீதான இராணுவ வன்முறைகள் இலங்கையில் பலத்த கண்டனங்களை மட்டும் அல்ல பெண்கள் மீதமான வன்முறை சார்ந்த விழிப்புணர்வையும் உண்டுபண்ணியிருக்கிறது. 1997ம் ஆண்டு கோணேஸ்வரி- என்ற அம்பாறையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயை இராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்தபின், அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்தார்கள்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கலா அவர்கள் சரிநிகரில் இப்படி ஒரு கவிதை எழுதியிருந்தார்கள்:

கோணேஸ்வரிகள்

நேற்றைய அவளுடைய சாவு-எனக்கு
வேதனையைத் தரவில்லை
மரத்துப் போய் விட்ட உணர்வுகளுள்
அதிர்ந்து போதல் எப்படி நிகழும்!?
அன்பான என் தமிழச்சிகளே
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள்!?
ஆகவே வாருங்கள்
உடைகளைக் கழற்றி
உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்
என் அம்மாவே உன்னையும் தான்.
சமாதானத்திற்காய் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளைத் திறவுங்கள்
பாவம்,
அவர்களின் வக்கிரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்.
வீரர்களே வாருங்கள்
உங்கள் வக்கிரங்களை
தீர்த்துக் கொள்ளுங்கள்
என் பின்னால்
என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா எல்லாம்
அவ்வளவோடு நின்றுவிடாதீர்!
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக் கூடும்
ஆகவே
வெடிவைத்தே சிதறடியுங்கள்
ஓவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி
புதையுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.
சிங்கள சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை
0

இந்தக் கவிதை இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் சர்ச்சைக்குள்ளாகியது. இதில் உபயோகித்திருக்கிற வார்த்தைகள் இனத்துவத்துக்கு அழுத்தம் கொடுப்பதோடு மட்டுமல்லாது தமிழ் தேசியவாதத்துக்கும் இடம் கொடுக்கிறது என்பதே பலரது கருத்தாக இருந்தது. ஆனால் இந்தக் கவிதை தன் இனப் பெண்ணுக்கு நடந்து முடிந்து விட்ட கொடுமையை அதுவும் தமிழ் என்பதாலே நிகழ்ந்ததால் அவருடைய கோபம் தேசியவாதமாய் ஆகிவிடுகிறது. இது, தனியே ஈழத்துத் தமிழ்ப் பெண்களுக்கு மட்டும்தானா இடம் பெறுகிறது என்று கேட்கலாம் ஆனால் தன்னுடைய எல்லைகளுக்குள் ஏற்படும் விடயங்கள் மிகுந்தை வீச்சைக் கொடுக்கும். அந்த வகையில் இந்தக் கவிதை மிகவும் உக்கிரமானது.

இலங்கையில் இச்சம்பவங்களின் பின்னணியில், பாரபட்சமற்ற சொற் பாவனைகள் மிக தீவிரமாக பின்பற்றப் பட்ட போதும், மொழியில், கற்புசார் மதிப்பீடுகள் அற்ற தன்மை தமிழ் நாட்டில் நிகழவில்லை. வெகுசன மற்றும் இலக்கிய இதழ்களிலும்கூட “கற்பழிப்பு” என்ற சொல்லே பாவனையில் இருக்கிறது. உதாரணமாக பெப்ரவரி (இதழ் 62) காலச்சுவட்டில், சேரன் ஆங்கிலத்தில் எழுதிய “மீண்டும் கடலுக்கு” (பக். 26) கட்டுரையைத் தமிழ் படுத்திய திவாகர் ரங்கநாதன் “...அகதி முகாம்களில் கற்பழிப்புகளும் பாலியல் தொந்தரவுகளும் தலை தூக்கியிருப்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன” என்று மொழிபெயர்த்திருப்பார். Rape என்பதை தமிழ் படுத்தையில் கற்பழிப்பு என்று உபயோகித்திருக்கிறார். அதை வாசித்தபோது சங்கடமாக இருந்தது, இதற்கு முன்னும் கூட உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் இப்படியான வார்த்தைகளையே பயன்படுத்தியிருந்தார்கள். இப்படியான சொற்களை இத்தகைய தீவிர (அறிவசார்) இலக்கியப் பத்திரிகைகளில் பார்க்கிறபோது உறுத்துகிறது. இந்த உறுத்தல் இயல்பாக வருகிறது. தமிழ்நாட்டில் எழுதுகிற, பெண்ணிய சிந்தனையுடைய, எழுத்தாளர்களுக்கு இது உறுத்துவதில்லையா?

நவீனம் என்றும், சுனாமி மற்றும் இன்ன பிற விடயங்களிலும் மற்றவர்கள் போல் அஜாக்கிரதையாய்(!) இல்லாது சமூக விழிப்புணர்வைக் காட்டி வருகிறது காலச்சுவடு. குறிப்பாக பெண்கள் மீதமான வன்முறை பற்றியும்; அவர்களின் படைப்புக்கள் மூலம் பெண்களுடைய தனிமையை ‘வியாபார நோக்கமின்றி’ சமூக அக்கறையுடன் புத்தகமாய் பதிப்பித்தும் வருகிறது. அப்படியான ஒரு நிறுவனத்தின் படைப்பில் வரும் இவ்வகையான முரண் மிகவும் நெருடுகிறது.

தமிழ் நாட்டு படங்கள் இலக்கியம் இன்ன பிற விடயங்கள் ஈழம் மற்றும் புலம் பெயர் தேசங்களில் ஏற்படுத்திய மாறுதல்கள் அதிகம். பெண்களுக்கெதிரான மிக முக்கியமான இந்த பிரச்சனையை ஏன் பெண்ணியவாதிகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் எதிர்க்கவில்லை? இது அவ்வளவு பெரிய விடயம் இல்லையா என்ன?.
P.C. சிறீராமின் “வானம் வசப்படும்’ என்ற படம் பார்க்க நேர்ந்தது. அதில் கல்யாணமான பெண் ஒருத்தி பலாத்காரப்படுத்தப்படுவாள், அவளை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பது தான் கதை. தமிழ் சுழலில் மிக வித்தியாசமான முயற்சிதான் ஆனால் அதில் தொடங்கியதில் இருந்து முடிவுவரை எத்தனை முறை “கற்பழிப்பு” என்ற சொல் வருகிறது என்டு எண்ணிக் கொண்டிருந்தேன். கற்பு என்ற அடிப்படையை வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை புனிதப்படுத்துகிறார்கள் அல்லது பார்ப்பவர்களை (convince) சமாதானப்படுத்துகிறார்கள், அவள் ‘கெடுக்கப்பட்டாலும்’ புனிதமானவள்தான் என்று. கற்பு என்கிற கோட்பாட்டை நியாப்படுத்துவதன் மூலம் அதை வைத்திருக்கவே விரும்புகிறார்கள்.
பெண்களின் மீது தீணிக்கப்பட்டு வரும் கற்பு சார் மதிப்பீடுகளோ அவற்றை அவர்கள் உயிரைக் குடுத்தேனும் காப்பாற்ற வேண்டும் என்கிற நிலைப்பாடுகளோ மாறவில்லை. இது ‘கற்பழிப்புத்தானே’ ஒழிய அதை அவளாய் விரும்பி போகாத வரை அவளில் குற்றமில்லை. அப்போ திருமணத்துக்கு முன்னோ பின்னோ கணவனில்லாத ஒருவனிடம் அல்லது பலருடன் உறவு கொண்டவர்கள் எல்லாம் கற்பற்றவர்களா? கற்பிற்கான நிர்ணயம் எது, இப்படியான ஒழுங்குகளையும் சமூக கட்டுமானங்களையும் காப்பற்ற வேண்டியவர்கள் பெண்கள்தானா என்பனபற்றியெல்லாம் கேள்வி கேட்கப்படுவதில்லை.

வைரமுத்து ‘இந்த சிறுக்கி மகளின்(முதல்வன்)’ என்று பாட்டு எழுதுகிறார். சிறுக்கி என்பது ‘கீழ்த்தரமானவள் அல்லது நடத்தை கெட்டவள்’ என்று க்ரியா தற்கால தமிழ் அகராதி சொல்லுகிறது,' இச்சொல்லை ‘செல்லமாய்’ சொல்லுகிறார் வைரமுத்து. இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லவில்லை ஆனால் இதைப் பயன்படுத்தும் விதம் மனைவி படுக்கையில் வேசையாய் (பாலியல் தொழிலாளி) இருக்க வேண்டும் என்பதற்கு ஒத்த நிலைப்பாடே இது. ஈழத்துக் கவிஞர் சேரன் “ஒரு வைன் கிளாஸ்/மெல்லிய பெண்ணின் சிறு மார்பகம் போல.” என்று வைன் கிளாசோடு ஒப்பிடுவார். அசைகின்ற பொருளோ அசையாப்பொருளோ எதோடாவது பெண்களை அவர் உடலை, உறுப்புக்களை ஒப்பிட்டாக வேண்டுமா?

இறுதியாய், இந்த ‘கற்பழிப்பு’ப் போன்ற வார்த்தைகளில் உள்ள அரசியலையும் பெண் மீதமான வன்முறையையும் புரிந்து எதிர்க்கவும் அதை உபயோகப்படுத்தாமல் செய்யவும், நவீன தமிழ் இலக்கியப் பத்திரிகைகள் முயற்சிகளை எடுக்கவேண்டும்.
இவற்றாலெல்லாம் எந்த மாறுதல்களையும் கொண்டு வந்துவிட முடியாதுதான் ஆனால் இப்படியான மொழியில் உள்ள பாரபட்சங்களை நீக்குவதூடாக மொழியிலுள்ள ஒடுக்குமுறையையாவது மாற்றி அமைப்போம்.

Comments on "'கற்பை' அழித்தல்"

 

Blogger dondu(#4800161) said ... (8:58 p.m.) : 

இப்பதிவு என்னை மிகவும் பாதித்தது. காலம் காலமாக நடந்து வரும் கொடுமையே இது. கற்பழிப்பு என்ற வார்த்தை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாகவே உள்ளது. யார் கற்பைப் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தையில்லாமல் போயிற்று.
ஆணோ பென்னோ கற்பை பொதுவாக வைப்போம் என்றான் மஹாகவி பாரதி. ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது? இதைப் பற்றி எழுத என்னிடம் விஷ்யம் இருக்கிறது. தனிப் பதிவாக என் வலைப்பூவில் இடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Blogger Moorthi said ... (10:05 p.m.) : 

சம்மதமில்லாமல் கொள்ளப்படும் எந்த உறவுமே வன்புணர்ச்சிதான்! கற்பு உடலோடு சம்பந்தப்பட்டதல்ல.. மனதோடு!

முன்னொரு காலத்தில் எம்ஜிஆர் கத்தி வைத்துக்கொள்ளச் சொன்னார். அப்போது ஏகப்பட்ட எதிர்ப்புகள். அப்போது தம்மைத்தாமே பாதுகாக்க மட்டுமே என்றார். அதேபோல நம் வீரப்பெண்கள் அனைவரும் கத்தியை வைத்திருங்கள். அது உங்களின் பாதுகாப்புக்காக மட்டுமே இருக்கட்டும். ஆணவம் காட்டி உங்களை பெண்டாள நினைக்கும் ஆடவரின் குறியை அறுத்து வீசுங்கள். இது மற்றவர்க்கு ஒரு பாடமாக அமையட்டும்!

 

Blogger டிசே தமிழன் said ... (10:48 p.m.) : 

//இவற்றாலெல்லாம் எந்த மாறுதல்களையும் கொண்டு வந்துவிட முடியாதுதான் ஆனால் இப்படியான மொழியில் உள்ள பாரபட்சங்களை நீக்குவதூடாக மொழியிலுள்ள ஒடுக்குமுறையையாவது மாற்றி அமைப்போம். //
உண்மைதான். முயற்சிப்போம்.

 

Blogger Narain said ... (12:11 a.m.) : 

தான்யா, நீங்கள் கூறியிருப்பது அனைத்தும் உண்மை. மொழியினாலும், அம்மொழி மூலம் ஏற்படும் அதிர்வுகளாலும் நானும் இதனை பலமுறை யோசித்ததுண்டு. மிக நல்ல பதிவு. உலகின் எல்லா மொழிகளுமே பெண்களை எதிராகவே வைத்திருக்கின்றன. தனியாக "கெட்ட சொற்களின் அரசியல்" பற்றி எழுதுகிறேன்.

எல்லா மொழிகளிலும், மிக சுலபமாய், அதிகமாய் புழங்கும் கெட்ட வார்த்தைகள் அனைத்துமே பெண்ணினை மையமாகக் கொண்டவை. எல்லா ஆண்/பெண்களிடமும், அடுத்தவரை வசைபாட, இழிவு படுத்த பயன்படும் கெட்ட வார்த்தைகள் இழிவு படுத்தபடுவரின், அம்மா [தே.....யா], அக்கா,தங்கை தவிர எப்போதாவது தந்தை என்கிற வட்டத்திலேயே சுழன்று கொண்டிருக்கிறது. இந்த பதிவில் சென்னையில் உபயோகப்படுத்தும் கெட்ட வார்த்தைகளை பதிக்க ல்ஜ்ஜையாக இருக்கிறது. ஆனாலும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நிற்க. உயிர்மை போன்ற இதழ்களிலும் இதுப் போன்ற வார்த்தை பிரயோகங்களிருப்பது நெருடலாக இருக்கிறது. உயிர்மையின் ஆசிரியரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் ஒரு வலைப்பதிவினை எழுதி வருகிறார். உங்களின் கருத்துக்கு கண்டிப்பாக செவி மடுப்பார் என்று தோன்றுகிறது. பார்க்க: http://uyirmmai.blogspot.com தனியாக மின்னஞ்சல் அனுப்புங்கள். நானும் என் பங்கிற்கு அவரைப் பார்க்கும்போது சொல்கிறேன்.

வன்முறையை மாற்ற இயலாவிட்டாலும், வன்முறையை அரசியலாக மாறும் நிகழ்வுகளையாவது தடுத்து நிறுத்த முயற்சிக்கலாம்.

 

Blogger குழலி / Kuzhali said ... (1:06 p.m.) : 

பதிவு மிகவும் தாக்கமாக இருந்தது...

//முன்னொரு காலத்தில் எம்ஜிஆர் கத்தி வைத்துக்கொள்ளச் சொன்னார். அப்போது ஏகப்பட்ட எதிர்ப்புகள். அப்போது தம்மைத்தாமே பாதுகாக்க மட்டுமே என்றார். அதேபோல நம் வீரப்பெண்கள் அனைவரும் கத்தியை வைத்திருங்கள். அது உங்களின் பாதுகாப்புக்காக மட்டுமே இருக்கட்டும். ஆணவம் காட்டி உங்களை பெண்டாள நினைக்கும் ஆடவரின் குறியை அறுத்து வீசுங்கள். இது மற்றவர்க்கு ஒரு பாடமாக அமையட்டும்!
//


மூர்த்தி இன்றைய நிலையில் கத்தி தேவைப்படுவது ஒரு சிலருக்குதான், ஆனால் பலருக்கு தேவைப்படுவது குண்டூசிகளும் குதிஉயர்ந்த செருப்பும் தான், மாநகர, நகரப்பேருந்துகளில் கூட்டத்தை காரணமாக வைத்து நடத்தப்படும் அத்துமீறல்கள், இந்த வயது அந்த வயது என்றில்லாமல் பள்ளிக்கு செல்லும் புதிதாக மீசை முளைக்கும்பருவத்திலுள்ள ஆண்(?!) முதல் பாடைக்கு செல்ல காத்திருக்கும் ஆண் வரை எல்லா வயது ஆண்களும் இதை செய்கின்றனர்(எல்லா ஆண்களுமல்ல).

 

Blogger தான்யா said ... (11:50 a.m.) : 

Dondu, மூர்த்தி, டிசே தமிழன், Narain,குழலி
நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.

இப்படியான சொற்களை கவனமாக பேசுவது ஆரோக்கியமானது ஏனேனின் கற்பழிப்பு என்று சொல்லும் போதே கற்பு சார்ந்த மதிப்பீடுகளை பாதுகபாப்பவர்கள் ஆகிறோம் வன்முறைசார்ந்த புரிந்துணர்வின்றி

 

Blogger U.P.Tharsan said ... (6:37 p.m.) : 

அருமையான(சோகமான)பதிவு.

 

Blogger Vetri Thirumalai said ... (5:30 a.m.) : 

முதலில் கற்பு என்பதையே தூக்க வேண்டும். எனக்கென்னவே ஆது ஆணாதிக்கத்துக்காவே கொண்டுவந்த சொல் என்று படுகிறது.

 

Blogger G.Ragavan said ... (7:15 a.m.) : 

கற்பழிப்பு என்ற சொல்லே அநாகரீகமானது.

வன்புணர்ச்சி என்று சொல்லலாம்.

கற்பு என்பது எதோடும் தொடர்பானது அல்ல. அது ஒன்றும் புனிதமானது அல்ல. கற்பு என்பது இல்லாத ஒன்றுக்கு ஒய்யார மாலை சூட்டிக் கொண்டாடப் படுவது.

 

Blogger Ramya Nageswaran said ... (7:35 a.m.) : 

நீங்கள் சொல்வது மிகவும் சரி தான்யா. தமிழ் சினிமாக்களில் மீது எனக்கு பல எரிச்சல்கள் இருக்கு. உச்சக்கட்ட எரிச்சல் ஒரு பெண் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டாள் என்றால் உடனே எப்பாடுபட்டாவது அச்செயலை செய்தவனை கண்டுபிடித்து அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் 'சுபம்' போட்டு விடுவது தான். இது போன்ற அபத்தத்தை கமலின் சகலகலாவல்லவன் முதல் எவ்வளவு படங்களின் செய்து கொண்டிருக்கிறார்கள்!! இந்த மாதிரி அறிவில்லாத portrayals தான் பலரை இதைப் பற்றி அதிகம் சிந்திக்கவிடாமல் செய்கிறது.

உங்கள் வலைப்பூவிற்கு இப்பொழுது தான் வருகிறேன். யோசிக்க வைத்த பதிவிற்கு நன்றி!

 

Blogger KARTHIKRAMAS said ... (2:56 p.m.) : 

சமீபத்தில் இந்தியாவில் பெப்பர் ஸ்ப்ரே விற்பனை செய்ய்ப்படுவதாக ஒரு நல்ல செய்தி வாசித்தேன்.

 

Blogger மு.மயூரன் said ... (4:37 a.m.) : 

தமிழ்மணத்தில் திடீரென இப்பதிவு வெளிப்பட்டதால் பார்த்தேன்.

எனுடைய பழைய பதிவு ஒன்றை உங்களுக்கு வாசிக்கக்கொடுக்கலாம் என எண்ணம்
http://mauran.blogspot.com/2004/10/blog-post.html

 

post a comment