2/14/2005

Profile 1: அம்பை (1970-)

Image hosted by Photobucket.com

ஒரு பெண் இன்னொரு பெண்ணோட மார்பகத்தை ஒரு ஆண் பார்க்கிற மாதிரியோ இல்ல தாய்மையோடு சம்பந்தப்பட்டதாகவோ தான் பாத்திருக்கா. உடம்பைப் பத்திய இந்தக் கருத்தே மாறணும். ரு பெண் இன்னொரு பெண் உடம்பை உணரணும். பெண்ணோட உடம்பை மறுவாசிப்பு செய்யணும்.
(அம்பை-காலச்சுவடு நேர்காணல்)
அம்பை என்கிற சி.எஸ்.லக்ஷமி தமிழின் மிக முக்கியமான பெண் படைப்பாளி. இவரின் எல்லாப் படைப்புக்களையும் வாசிக்கையில் மிகவும் பிரமிப்பாக இருக்கும். இன்று கூட பல பெண்ணியப் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதரணமாய் அம்பை தொட்டுச் சென்றிருக்கிறார். உறவு-காதல்-திருமணம்-அரசியல்-இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பொதுவாக (வெகுசன நாவலாசிரியை) லக்ஷ்மி போன்ற அவர் காலத்துப் பெண்கள் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்க அம்பை பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்துள்ளார். அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் விமர்சித்திருப்பார்கள் என்று எண்ணாமலிருக்கவும் முடியவில்லை. இதுவே தலித் பெண் எழுதியதென்றால் மிகமோசமான எதிர்வினைகளை சந்திக்கவேண்டி இருந்திருக்கும் என்பதும் உண்மை.
அம்பையின் முதலாவது தொகுதியான சிறகுகள் முறியும்(1976) பெண்ணிய மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய மிக முக்கியமான பிரதி. ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள். அவற்றைப் பற்றி (இவரது) காலச்சுவடுப் பின்னட்டைக் குறிப்பில் கற்பனைக் கதைகள் என்று எழுதியிருக்கிறார்- அது தேவையில்லை என்று தோன்றியது. மிக யதார்த்தமாய் சென்று கொண்டிருக்கும் கதைகளை உண்மையில்லை இது வெறும் கற்பனை தான் என்று வாசகர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் தான் பெண்களின் எழுத்தாய் இருக்கிறது என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவர் ஒருவர் சொல்லுவார் அம்பை கருத்தை வைத்து கதைகளை கட்டுகிறார், அதை உணர்வு பூர்வமாய் எழுதுவதில்லை என்று. அவர் கருத்துக்காக எழுதினாலும் அவை ஆழமானவை. சில முயற்சிகள் தோல்வியடைந்தும் இருக்கிறது ஆனாலும் அவருடைய எழுத்து ஆளுமை சொற் பிரயோகங்கள் கருத்துப் போன்றவை மிகவும் திடமாய் வெளிப்பட்டிருக்கிறது.
சக்கர நாற்காலி என்ற கதை பணக்கார இளைஞர்கள் பேசும் புரட்சியை குடியுடன் கூடிய மேற்தட்டு வர்க்கப் பெண்கள் பேசும் பெண்ணியத்தை மற்றும் ஆண் உறவுகளை சாடுகிறது. வெளிநாடுகளில் படித்துவிட்டு வந்த மார்க்சிய பிரதிகளிலிருந்தும் எழுத்துக்களிலிருந்தும் சொற்களை உபயோகிப்பதும், புரட்சி பேசுவதும், குடித்துத் திளைப்பதும் எவ்வளவு போலியானது என்பதை சித்தரிக்கும் சிறுகதை. எல்லாக்கதைகளையும் விட இது தான் உறவு சார் கேள்விகளையும் எழுப்புவதாய் படுகிறது. இவர்களுக்குள் கேள்வி கேட்கிற ஒரு பெண், வறுமையே மிகப் பெரிய ஆசானாய் இருந்து அவளை உருவாக்கியது.
“ஆக்ஸ்போர்ட்டில் படித்திருந்தான் நம்பியார். போகும் போது பத்து ஸ_ட்டுக்கள் தைத்துக்கொண்டு போனானாம். திரும்ப வரும் போது பைஜாமா குர்த்தாவுடன் வந்தான். பல்கலைக்கழகத்தின் மிகத் தீவிர இடதுசாரி அவன். அவன் பீடி தான் குடித்தான். சிலசமயம் கிழிந்த குர்த்தாக்களையே அணிந்து கொண்டான். அவனுடைய ஆக்ஸ்பேட்டு பாணிகளையும், அம்பாசிடர் காரையும் தான். அவனால் விட முடியவில்லை. வாயில் பீடியுடன் ஆங்கில ‘ர”கரங்களை அழுத்திக் குழைத்துத்தான் அவன் பேசினான். அவனால் மலையாளத்தையும் ஹிந்தியையும் பயில முடியவில்லை. தன் பீடி, குர்தா, பைஜாமா மூலமே கேரளத்துப் பாட்டாளி வர்க்கத்தைத் தன் சிந்தனா முறைக்குத் திருப்ப முடியும் என்று அவன் மனதார நம்பிக்கொண்டிருந்தான்.” இது ஒரு கதாபாத்திரத்தின் மனப்போக்கைச் சொல்கிறது கூடவே ஒரு வசதி குறைந்த பெண்ணுடன் வாழ்வதும் புரட்சி என்று குழம்பும் ஒரு பகுதியினரை பற்றியது சக்கர நாற்ககாலி என்ற இந்தக் கதை. அதற்குள் வாழ்வை நேர்மையாய் எதிர்கொள்ளும் பெண் என்று கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தமாய் பின்னப் பட்டிருக்கிறது.
“ஸஞ்சாரி” என்ற கதை இரு காதலர்களைப் பற்றிய கதை. காதலர் என்றால் ஒர் படைப்பாளியான பெண்ணைப் பற்றிய கதை. அவளுடைய பிரமண காதலன் பற்றிய பிம்பங்கள் மிகுந்த எள்ளலுடன் வெளிப்பட்டிருக்கும். ஓர் சாதாரண சம்பவம் கூட எம்படியான ஓர் பிம்பத்தை எதிராளியிடம் உண்டு பண்ணுகிறது என்பதைச் சொல்லுகிறது இந்தக் கதை. ரங்கா என்கிற பிராமணப் பையன் அவனுடைய காதலி ருக்மா. அவர்களுக்கிடையிலான மனப்போக்கை உள்ளே என்ன நினைக்கிறார்கள் வெளிய என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் எழுதும் போது, அது எவ்வளவு போலியானது என்றெல்லாம் உணர முடியும். அவன் ஒரு நல்ல பிராமணப் பையன் என்று தான் கதையை ஆரம்பித்திருப்பார், அவன் பூணூல் எல்லாம் களைந்திருந்தாலும் அவன் ஓர் நல்ல பிராமணப் பையன்.
ரங்கா, ”ருக்மா நீ அடிக்கடி குமாரோட பேசிறதும், பழகறதும் எனக்குப் பிடிக்கேல்லை”
அப்ப அவள் மனசுக்குள்ள நினைக்கிறதா வரும் “கட்டாயம் உன் அப்பாவுக்கு அவர் மனைவி வேற ஆம்பளையைப் பார்த்திருந்தால் பிடித்திருக்காது. அவர் அப்பாவுக்கும் அப்படியே. அவர் அப்பாவின் அப்பாவுக்கும்..” அப்ப அவன் யோசிப்பான் ”எப்படிச் சொல்லுவது? உன் உடம்பில் ஒரு மிருக அழகு இருக்கிறது. உன் வாழ்வில் எத்தனை மேடு பள்ளங்கள்? நீ என்னை ஏன் விரும்புகிறாய்? நான் ஏமாந்தவனா? நினைத்தாலே ரத்தம் கொதிக்கிறது. குமாரோடு நீ கதைப்பது உன் பின்னால் என்னை ஓடிவரவைக்கவா? நான் உன் செல்ல நாயா?” இப்படிப் போகும். இன்றைய நவீன ஆண் எழுத்தாளர்களுக்கு தங்களுடைய மனைவி பெண்ணிய சிந்தனை கொண்டவள் எண்டு காட்டவும் வேண்டும் ஆனா அவள் அவர்கள் நினைக்கிற எல்லைகளைத் தாண்டவும் கூடாது. எல்லாப் பேச்சுக்குப் பின்னாலும் அவர்களில் தங்கியிருக்கிற பெண்களாய் இருப்பது அவசியமாய் படுகிறது. இந்த மாதிரியான வாழ்க்கையை உறவுகளை இந்தக் கதை பேசுகிறது. சிலவேளைகளில் ஆண்களுக்கு ஏன் பெண்களுக்குக் கூட கொஞ்சம் கூட போல தோன்றலாம் ஆனால் ருக்மாவுக்கும் ரங்காவுக்கும் இடையில் இடம்பெறும் உரையாடல்கள் எண்ணங்கள்-முரண்கள் உறவில் முக்கியமானவை, சிந்திக்கத் தூண்டுபவை.
கடைசியாக “சிறகுகள் முறியும்” என்ற சிறுகதை குடும்பம் என்ற பலமான அமைப்புள் அமிழ்ந்து அல்லது அழிந்து கொண்டிருக்கிற ஒரு சுயம் அல்லது அவள் வளர்த்து வந்த குணங்கள் என்று கூடச் சொல்லலாம். கருமியான கணவனின் இயல்புகள் எப்படி எல்லாம் ஓர் பெண்ணின் வாழ்க்கையை மாற்றிப் போடுகிறது என்பதே கதை. இந்தக் கதையை நிச்சயமாக சாதாரணமான நல்ல வாழ்க்கையை வாழ்கிற எந்தப் பெண்ணானாலும் வாசிக்கையில் உணர முடியும். அப்படியான அவர்களது வாழ்க்கையைப் பேசும் கதை.
**********
அம்பையின் முதலாவது தொகுதி சிறகுகள் முறியும். இந்தத் தலைப்பே நிலையில்லாமையை சொல்கிறது. போதுவாக பெண்களைப் பற்றி எழுதிய கவிஞர்கள் எல்லாம் விட்டுச் சிறகடிப்பாய், சிறகு முளைக்கும், சிறகு விரியும் என்று சிறகு என்பதே சுதந்திரமாய் சொல்வார்கள் அம்பை சிறகு முறியும் என்று பறக்கும் போதே சொல்லிவிடுகிறார். அடுத்தது வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988). வீடென்பது சுதந்திரம் வீடென்பது உனக்கான இடம் ஆனால் அதே நேரம் அங்கு தான் ஓர் மூலையில் சமையல் அறையும் இருக்கிறது என்பதையும் அங்கு தான் ஒர் பெண்ணின் வாழ்வு தள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்கிறது இந்தத் தலைப்பு. இவ்விரு தொகுப்புகள் போலல்லாது, காட்டில் ஒரு மான் (2000) பழைய ஒப்பிடல்களுக்குத் திரும்பியுள்ளது என்று தோன்றுகிறது. ஏனெனின், இதில் பெண்ணை மானுடன் ஒப்பிடும் அந்த பழைய உவமைகள் வந்துவிடுகிறது, பெண்ணை மானாக ஒப்பிட்ட அந்த மரபுக்குள் மீண்டும் அம்பை வருகிறார். அட்டைப் படங்கள் கூட மாறுகிறது. முன்பிருந்த தன்மை போய், காட்டில் ஒரு மானுக்கு வீணை, மான் என்று ஒருவகையான பெண் தன்மை என்கிற உணர்வை வலிந்து உண்டு பண்ணியிப்பார். புதிப்பகத்தை குறை கூற முடியாதவாறு அம்பை அவற்றில் தானே கவனம் செலுத்துவதாய் சொல்கிறார். தற்பொழுதைய அவருடைய படைப்புக்கள் பின்நோக்கிச் செல்கின்றன என்றே சொல்லலாம். வழமையான பெண்ணிய நோக்குப் போய், இருக்கிற நேரத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தன்மை வந்திருப்பது போல தோன்றுகிறது. ஒரு ஓய்வு எழுத்து என்று சொல்லலாம். தான் எதிர்த்த மேம்போக்கான பல விடயங்களை இன்று அம்பை தானே வலிந்து எழுதுவது போல் தெரிகிறது. ஆரம்ப உயிர்மையில் தானும் நண்பியும் ‘தண்ணியடிக்க’ கடை தேடினதாய் ஒரு கதை வரும். இவை சொல்லுவது அவர் விமர்சித்த அந்த மேட்டுக்குடியினர் புரட்சி பேசும் தன்மையை அவர் சென்றடைந்ததையே. அம்பையை படிக்காமல் எந்த ஓர் பெண் எழுத்தாளரும் வந்து விட முடியாது என்கிறளவு அவரது கதைகள் கட்டுரைகள் விமர்சனங்கள் அளுமை செலுத்தியிருக்கிறது.
அதே போல அம்பையின் மூன்று புத்தகங்களுக்கும் இடையிலான இடைவெளி 12 வருடங்கள். இது தான் பெண்களின் படைப்புக்கும் ஆண்களின் படைப்புக்குமான மிகப் பெரிய இடைவெளி என்று தோன்றுகிறது. அவர்காலத்து எழுத்தாளர்கள் நாவல், சிறுகதை, நாடகம் என்று பல புத்தகங்கள் போட்டிருக்கிறார்கள். அம்பை இதுவரை 3 சிறுகதைத் தொகுதிகள் தான் வெளியிட்டிருக்கிறார்.
இன்று இவரோடும் படைப்போடும் நிறைய முரண்கள் ஏற்பட்டாலும் அம்பையின் இடம் பெண்ணியத்தில் மிகவும் முக்கியமானது. இவரின் படைப்புக்கள் எழுப்புகிற அல்லது தூண்டுகிற சிந்தனைகள் இன்னும் பல எழுத்தாளர்களை உருவாக்கும் ஆளுமை செலுத்தும். அவரை நெருங்கையில் ஏற்படும் முரண், தூரே இருந்து வாசிக்கையில், சிறிது சிறிதாய் என்னை அம்பை என்கிற படைப்பாளியின் படைப்புகளை மட்டுமே பார் என்பது போல இழுத்துச் செல்கிறது.
***

Comments on "Profile 1: அம்பை (1970-)"

 

Blogger டிசே தமிழன் said ... (1:15 a.m.) : 

தான்யா,
நல்லதொரு பதிவு. அம்பையின் கதைகளை வாசித்தபோது உங்களைப்போலவே
//அவர் காலத்துப் பெண்கள் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்க அம்பை பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்துள்ளார். அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் விமர்சித்திருப்பார்கள் என்று எண்ணாமலிருக்கவும் முடியவில்லை.//
நானும் வியந்திருக்கின்றேன்.

//ஆரம்ப உயிர்மையில் தானும் நண்பியும் ‘தண்ணியடிக்க’ கடை தேடினதாய் ஒரு கதை வரும். இவை சொல்லுவது அவர் விமர்சித்த அந்த மேட்டுக்குடியினர் புரட்சி பேசும் தன்மையை அவர் சென்றடைந்ததையே. //
என்பது முக்கியமான அவதானம் என்று நினைக்கின்றேன்.

மற்றபடி
//ஏனெனின், இதில் பெண்ணை மானுடன் ஒப்பிடும் அந்த பழைய உவமைகள் வந்துவிடுகிறது, பெண்ணை மானாக ஒப்பிட்ட அந்த மரபுக்குள் மீண்டும் அம்பை வருகிறார். அட்டைப் படங்கள் கூட மாறுகிறது. முன்பிருந்த தன்மை போய், காட்டில் ஒரு மானுக்கு வீணை, மான் என்று ஒருவகையான பெண் தன்மை என்கிற உணர்வை வலிந்து உண்டு பண்ணியிப்பார். //

நீங்கள் குறிப்பிடும் அர்த்தம் அதற்கான நியாயத்தைக் கொண்டிருந்தாலும், சிலவேளைகளில் இந்தப்படிமங்கள் கூட இதுவரை ஆண்நிலைப்படாத ஒரு புதிய வாசிப்பைத் தரவும் கூடுமல்லவா? (எனெனில் பிரசுரிக்கப்படாத ஒரு கவிதைத்தொகுப்பு வாசித்தபோது, வீணை, மலர் என்று ஏற்கனவே கூறப்பட்ட சொற்களை வைத்து வேறொரு அர்த்தம்வரும்படி புனையப்பட்டிருந்த கவிதைகள் வாசித்த ஞாபகம் வந்தது). காட்டில் ஒரு மான் தொகுப்பிலுள்ள கதைகளை வாசிக்காததால் தெளிவாகக் கருத்துச் சொல்ல முடியாதிருக்கிறது.

அம்பை (1970- ) என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள். இது அவரது படைப்புத்தொடங்கும் காலத்தையா குறித்து நிற்கிறது? அல்லது அவரது பிறப்பைக்குறிக்கின்றதா? பிறந்த ஆண்டெனில் தவறாயிருக்கும் என்று நினைக்கின்றேன்.

 

Anonymous Anonymous said ... (2:51 a.m.) : 

Good Post. Keep posting

Suresh Kannan

 

Blogger Balaji-Paari said ... (5:21 p.m.) : 

அம்பை பற்றி எழுதியதற்கு மிகவும் நன்றிகள்.
»»தானும் நண்பியும் ‘தண்ணியடிக்க’ கடை தேடினதாய் ஒரு கதை ««
இந்தக் கதை பாண்டிச்சேரியில் நடப்பதாய் ஒரு மங்கலான நினைவு. என்னை அவரது எழுத்துக்குள் கூட்டிச் சென்றது இந்தக் கதை. இதை எங்கே படித்தேன் என்று நினைவில்லை.
இந்த கதை இருந்த புத்தகத்திலேயே மேலும் ஒரு கதை. தனது குழந்தைதனமான கணவனுக்காக ஒரு குழந்தையை, கிராமத்து பெண் பெற்றெடுப்பாள். இதுவும் மிக நன்றாக இருந்தது. (இதை எழுதியதும் அம்பையா?).

நன்றிகள் இந்த பதிவிற்கு.

மிகவும் நன்றிகள்...

 

Anonymous Anonymous said ... (6:48 p.m.) : 

அம்பையின் காட்டில் ஒரு மான் என்ற இந்த தலைப்பு எவ்விதமான புதிய முயற்சியையோ அல்லது கருத்தையோ தரவில்லை. மாறாய் அவரையும் அறியாமல் அவர் பழமைக்குத் திரும்புகிறார் என்பதாகவே எனக்குப் பட்டது. காட்டில் ஒரு மான் தொகுப்பில் உள்ள கதைகளைப் பார்த்தால் இதைச் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். மற்றும்படி தாலி மெட்டி, பூ வீணை, மான் என்று தங்கள் கதைகளில் அல்லது கவிதைகளில் என்ன தருணத்தில் எவ்வகையான உணர்வை உண்டு பண்ண உபயோகிக்கிறார்கள் என்பதைப் பொறுத்த விடயம். அம்பை ஒருபோதும் அப்படியான பிம்பங்களை தன் கதைகளுக்கு ஆரம்பத்தில் கொடுத்ததில்லை. அவை முதன் முதலாக காட்டில் ஒரு மான் தொகுப்பில் வரும் போது அவருடைய அணுகுதலில் அல்லது சிந்தனையில் உள்ள மாற்றமாகத் தான் வெளிப்படுகிறது.
1970 ஆண்டு அவர் எழுத ஆரம்பித்த ஆண்டு. 35 வருடங்களாக தமிழில் தொடர்ந்து எழுதிவரும் பெண் படைப்பாளி. இவர் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் என்று நினைக்கிறேன்.
பாலாஜி: அந்தக் கதைகள் உயிர்மை இல் வெளிவந்தன ‘பயணம் 1,2’ என்கிற தலைப்புகளில்.
உங்கள் விமர்சனங்களிற்கு நன்றி.
-Thanya

 

Blogger புதிய கனா said ... (8:33 p.m.) : 

70களில் எழுத ஆரம்பித்த அம்பை பற்றிய சிறப்பான, சுருக்கமான பதிவு.
Do write more.

 

Blogger Santhosh Guru said ... (7:28 a.m.) : 

Thanya, Can you give me your email ID ?. Or just send a blank mail to my ID santhoshguru@gmail.com .

 

Blogger சுந்தரவடிவேல் said ... (9:58 p.m.) : 

இதுவும், பொடிச்சியின் அம்பை பற்றிய பதிவும் உலுக்கி விட்டன. பெண்மையைப் பற்றிய தற்போதைய புரிதல்?களில் ஏதோ கோளாறு இருப்பது மட்டும் தெரிகின்ற வேளையில் எங்கெங்கே என்று அறைந்து காட்டுவது போலிருக்கிறது.

 

Anonymous Anonymous said ... (8:38 a.m.) : 

அறிவொளி இயக்கம் தென் மாவட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த நாட்களில், அவர்களுடன் சேர்ந்து பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பணியாற்ற எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. புதிதாகக் கல்வி கற்றுக்கொள்பவர்களுக்கு உரிய எளிய வாசித்தலுக்கான புத்தகங்களுக்கு, கிராமங்களில் எத்தகைய வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிவதில் அப்போது அதிக ஈடுபாடு காட்டினேன்.

ஒரு கிராமத்தில், அறிவொளி பயிற்சி வகுப்பின்போது, ஒரு பெரியம்மாவைப் பாடுவதற்காக அழைத்திருந்தார்கள். அவர் தனது தோற்றத்துக்குப் பொருந்தாத கறுப்பு கூலிங் கிளாஸ் அணிந்தவராக, வெற்றிலைக் குதப்பலுடன் வந்தார். தனக்குத் தெரிந்த ஒரு பாடலைப் பாடுவதாகச் சொல்லி மேடையேறியவர்,

தெம்மாங்குப் பாட்டு ஒன்றைப் பாடினார். நல்ல குரல் வளம். பாட்டு முடிந்த தும், அவர் தனது பெயர் பேச்சியம்மாள் என்றும், தான் கிராமம் கிராமமாகச் சென்று இழவு வீடுகளில் ஒப்பாரி பாடும் வேலை செய்வதாகவும் சொன்னார். அதைக் கேட்டதும் கூட்டத் தில் பலருக்கும் சிரிப்பு.

அந்த அம்மாள் மைக்கை தன் கையில் வைத்துக் கொண்டபடியே, ‘ஆபீஸர்கள் எல்லாம் வந்திருக்கீங்க. ஒரேயரு ஒப்பாரி பாட்டு மட்டும் பாடுறேன், கேட்டுப் பாருங்க!’ என்றார். அன்றைய நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வருவதாக இருந்த தால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேச்சியம்மாளிடம் இருந்து மைக்கைப் பிடுங்கிக்கொண்டு, அவரை ஓரமாகப் போய் உட்காரச் சொன்னார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் வந்து பயிற்சி வகுப்பைத் துவக்கி வைத்தபோது பேச்சியம்மாள் எழுந்து போய் அவரிடம், ‘‘அய்யா! நான் நல்லாப் பாடுவேன். என்னைய பாட விட மாட்டேங்குறாங்க’’ என்று சொன்னார். அவர் பேச்சியம்மா ளிடம், ‘உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?’ என்று கேட்டார். ‘‘அதெல்லா மில்லீங்க... நான் இட்டுக்கட்டி பாடுறது தாங்க!’’ என்றார். எழுத்தறிவு வகுப்பில் சேர்ந்து படிப்பதாக இருந்தால் அவரைப் பாடுவதற்கு அனுமதிப்பதாகச் சொன்னதும், தலை ஆட்டிவிட்டு மைக்கை வாங்கி, ஒரு ஒப்பாரிப் பாடலைப் பாடத் துவங்கினார்.

பாட்டு துவங்கிய இரண்டு நிமிஷங் களுக்குள் பேச்சியம்மாளின் முகம் சிவந்து, கண்கள் வீங்கி, தன்னை அறியாமலே துக்கம் பீடித்த குரலில் உரத்து பாடத் துவங்கினார். விழாவுக்கு வந்திருந்த அதிகாரிகள், ‘என்ன ஒப்பாரி பாடுது?’ என்று எரிச்சலாகி, பாதி பாடிக் கொண்டு இருக்கும்போதே, ‘போதும்’ என்று நிறுத்தச் சொன்னார்கள்.

அவரோ எதுபற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார். பாடலின் துக்கம் கேட்பவர்களையும் துவளச் செய்வதாக இருந்தது. பதினைந்து நிமிஷங் களுக்குப் பிறகு, அவராக முந்தானையால் தனது கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து யாவருக்கும் ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு வந்து தன் இடத்தில் உட்கார்ந்துகொண்டார். அன்றைய பயிற்சி வகுப்பு முடிந்ததும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவரிடம் போய், ‘‘நன்றாகப் பாடினீர்கள். உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்? உங்கள் கணவர் என்ன செய்கிறார்?’’ என்று விசாரித்தார்.

பேச்சியம்மாள் தனக்குக் கல்யாணம் ஆகவில்லை என்றும், ஒரு ஆளோடு சேர்ந்து கொஞ்ச காலம் வாழ்ந்ததாகவும், அப்படி ஏற்பட்ட உறவில் ஒரு பொம்பளைப் பிள்ளை பிறந்து, அதுவும் பத்து வயதில் வயிற்றுப்போக்கில் இறந்துவிட்டதாகவும் சொன்னார்.

பிறகு, அவராக கள்ளச் சிரிப்பு சிரித்த படி, ‘‘நான் தினம் நூறு, இருநூறு மில்லி நாட்டுச் சாராயம் குடிச்சிருவேன் சார்! அதுபோக வெத்தலைக்கு தினம் ரெண்டு ரூவா வேணும். ஒரு நா ஒப்பாரி வைக்கக் கூப்பிட்டா, பத்து ரூவா குடுப்பாங்க. சில வீடுகள்ல அவங்களே ரம் பாட்டிலு வாங்கிக் குடுத்துருவாங்க. என்னைய மாதிரி நாலஞ்சு பொம்பளைக இருக்கோம். எங்கே சாவு விழுந்தாலும், எங்களுக்குச் சொல்லிவிட்ருவாங்க. தெக்கே நான் போகாத ஊரே இல்லை. செத்துப்போன ஆளை நல்லா புகழ்ச்சியாப் பாடுவேன். செத்துப்போன உசிரு வீட்டைச் சுத்தி நின்னு கேட்டுக்கிட்டு இருக்கும்னு சொல்வாங்க. அது மனசு குளிரப் பாடுவோம். இதான் எங்க பிழைப்பு’’ என்றபடி தயக்கத்துடன், ‘‘பாடுனதுக்கு ரெண்டு ரூவா காசிருந்தா, குடு சார்! உன் பேரைச் சொல்லி வெத்தலை வாங்கிப் போட்டுக்கிறேன்’’ என்றாள்.

கலெக்டர் தனது பர்ஸிலிருந்து பத்து ரூபாய் எடுத்து நீட்டினார். அவள் வாங்க மறுத்தபடி, ‘‘வெத்தலைக்கு காசு குடுங்க போதும்Õ’ என்றாள். அருகிலிருந்த அதிகாரி ரெண்டு ரூபாய் எடுத்து நீட்டினார். அதை வாங்கிக்கொண்டு விடுவிடுவென வெளியே நடந்து போய்விட்டார் பேச்சியம்மாள்.

இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதே கிராமத்துக்கு இன்னொரு முறை போனபோது, பேச்சியம்மாள் எழுத்தறிவு வகுப்பில் படித்துக்கொண்டு இருப்பதைக் கவனித்தேன். கையில் ஒரு சிலேட்டுடன், எதையோ மிக கவனமாக எழுதப் பழகிக்கொண்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் வணக்கம் வைத்து, ‘‘என் பேரை மட்டும் எப்படியாவது எழுதி பழகிக்கிடணும்னு பார்க்கிறேன், சார்!’’ என்று சொல்லிச் சிரித்தார்.

ஆறேழு மாதங்களுக்குப் பிறகு, அவரை ஒரு நாள் மதுரை மொட்டைக் கோபுரம் அருகே சந்தித்தேன். யாரோ சில பெண்களுடன் நின்றிருந்தவர், என்னைக் கண்டதும் அவசர அவசரமாக அருகில் வந்து சிரித்தபடியே, ‘‘இப்போ என் பேரை எழுத எனக்குத் தெரியும் சார்! கலெக்டர் அய்யாவுக்குக்கூட என் பேரை மட்டும் ஒரு தபால் அட்டையில் எழுதிப் போட்டேன். அவுககூட பதிலுக்கு எனக்குக் கடுதாசி போட்டிருக்காங்க’’ என்று தன் இடுப்பில் சொருகியிருந்த ஒரு தபால் அட்டையை எடுத்துக் காட்டினார்.

அட்டை கசங்கி மடங்கி இருந்தது. அந்த கடிதத்தை அவரே எழுத்து எழுத் தாகக் கூட்டி வாசிக்கத் துவங்கினார். அக் கடிதத்தில் கலெக்டர், பேச்சியம்மாள் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். படித்து முடித்தபோது பேச்சியம்மாள் முகத்தில் இருந்த சந்தோஷமும் வியப்பும் பரவசம் தருவதாக இருந்தன.

தயக்கத்துடன், ‘‘சரியா படிச்சனா சார்?Õ’ என்று கேட்டார். ‘ஆமாம்’ என்று தலையாட்டியதும், ‘‘படிக்காத பொட்டக் கழுதையா இத்தனை வருசம் வாழ்ந்துட் டமேனு நினைக்கும்போது வெட்கமா இருக்கு சார்! எனக்கு அக்கா தங்கச்சி ஆறு பேரு. யாருமே படிச்சவக இல்லை. இப்போ நான்தான் முதல்ல எழுதப் படிச்ச ஆளு. ஆனா, இப்போ யாருக்குக் கடுதாசி எழுதுறதுனுதான் தெரியலை. உங்க விலாசம் குடுத்தா உங்களுக்குக்கூட ஒரு கடுதாசி எழுதிப் போடுவேன் சார்’’ என்றார்.

முகவரியை எழுதிக் கொடுத்ததோடு, கூடவே வெற்றிலை போடுவதற்கு வைத்துக்கொள்ளும்படி இரண்டு ரூபாய் கொடுத்தேன். ‘எதுக்கு?’ என்று தயக்கத்துடன் வாங்கிக்கொண்டவர், கிழக்கு கோபுரத்தை நோக்கி நடந்து போனார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, பேச்சியம்மாளுக்கு திடீரென உலகம் பளிச்சென திருநீறு இட்டுத் துடைத்த சிம்னி விளக்கைப் போல உருமாறி விட்டது போலிருந்தது. எழுத்தும் படிப்பும் என்ன தரும் என்பதற்குச் சாட்சியாக இருந்தது அவரது நடை.

கலாசாரத்தின் முக்கியப் பணி பெண்களை கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதுமேயாகும். இந்தியக் கலாசாரக் கருத்துருவங்களில் பாதி, பெண்களை எப்படி நடத்துவது என்பதற்கான அடக்குமுறைக் குறிப்புகளே! சரித்திரப் புத்தகங் களில் அரசர்களின் வெற்றியும் வீரமும் பதிவாகி இருக்கிறதேயன்றி, அவர்களின் அந்தப்புரங் களுக்குள் வாழ்ந்து மடிந்த பெண்களின் பெரூமூச்சும் கண்ணீரும் பதிவாகவே இல்லை.

பாபரைப் பற்றித் தெரிந்த நமக்கு அவரின் அம்மா பெயர் தெரியாது. மும்தாஜுக்காக அழகான தாஜ்மஹால் கட்டப்பட்டிருப்பது தெரியும். ஆனால், அவள் வருடம் தவறாமல் ஒரு குழந்தையைப் பிரசவித்து ஜன்னி கண்டு உடல் வெளிறியது நமக்குத் தெரியாது. ராமனோடு கூடவே சீதையும் வனவாசம் போனாள். அவர் களோடு லட்சுமணனும் போனான். ஆனால், லட்சுமணன் மனைவி என்ன ஆனாள்? கௌரவர்கள் நூறு பேர் என்று தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு, அவர்களுக்கு ஒரு தங்கை இருந்ததோ, அவள் பெயர் துச்சலை என்பதோ தெரியும்?

பெண்களின் இயல்பான சுபாவத்தையும் கலா சாரம் அவர்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் மனத்தடைகளையும் தனது எழுத்தின் மூலம் கூர்மையாக விமர்சனம் செய்பவர் அம்பை. இவரது கதைகள் மிக நுண்மையாக பெண்களின் கோபத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்து பவை. தமிழ்ச் சமூகத்தில் காலங்காலமாகவே பெண் ஒடுக்கப்பட்டு வருவதை முகத்தில் அறை வதுபோல வெளிப்படுத்துபவை.

‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்கிற இவரது சிறுகதைத் தொகுப்பில், ‘புனர்’ என்னும் சிறுகதை மிக முக்கிய மானது. இக்கதை லோகிதாஸ், சபரி என்கிற இரண்டு கதாபாத்திரங்களைப் பற்றியது. இருவரது குழந்தைப் பருவத்தி லிருந்து கதை துவங்குகிறது. லோகிதாஸ் வெற்றிகரமான ஒரு ஆணாக வளர வேண்டும் என்பதற்காக, அவனுக்குள் சிறு வயதிலேயே அவன் இன்ஜினீயர் ஆக வேண்டும், பணம் சம்பாதிக்க வேண் டும் என்கிற எண்ணத்தை விதைப்பதில் துவங்கி, அவன் என்ன விளையாட வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆயிரம் அறிவுரைகளும் முன் உதாரணங்களும் காட்டப்பட்டு வளர்க்கப் படுகிறான்.

ஆண் பெண் இருவருமே கலாசாரத்தின் ஒழுக்க விதிகளை ஏற்றுக்கொண்டு, அதன் வழிகாட்டுதலைத் தங்களது சொந்த எண்ணங் களாக மாற்றிக்கொண்டு வளர்கிறார்கள். இந்த இருவரும் தங்களது பருவ வயதில் சந்தித்துக்கொள்கிறார்கள். காதல் கொள்கிறார்கள். நெருக்கமாகப் பழகும் சந்தர்ப்பம் உருவாகிறது.

பெண்ணைப் பற்றித் தனக்கு இருந்த கற்பனை யாவும் மிகையானது என்று லோகிதாஸ் அப்போதுதான் உணர் கிறான். அதுபோலவே ஆணைப் பற்றித் தனக்கு தெரிந்தவை யாவும் அர்த்தமற்றவை என்று சபரியும் உணர்கிறாள். காம வேகத்தில் இருவரும் உடலுறவு கொள்கிறார்கள். இதனால் சபரி கர்ப்பமாகிறாள்.

இப்போதும் பிரச்னை அவளுக்கு மட்டுமே உரியதாகிறது. திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகிவிட்டது தெரிந் தால் பிரச்னை என்று கர்ப்பத்தைக் கலைப்பதற்கு அழைத்துப் போகப்படு கிறாள். இரும்புக் குறடுகள் அவள் வயிற்றில் வளரும் உயிரை நெருக்கி அழிக்கின்றன. உதிரம் பெருகி ஓடுகிறது.

வணிக கலாசாரம் தனது எளிய உத்தியாக பெண்களைப் பற்றிய மிகுதியான கற்பனைகளை ஆண்களிடமும், ஆண் களைப் பற்றிய மயக் கங்களைப் பெண்களிடமும் எப்படி தனது சந்தைப் பொருட்களை விற்பதற்காக உருவாக்குகிறது என்பதையும் இக்கதை துல்லியமாகச் சித்திரிக்கிறது.

கால மாற்றம் எத்தனையோ தளங்களில் பெண்களைப் பணியாற்றவும் பங்கேற்கவும் சாத்தியப்படுத்தியுள்ளது. ஆனால், இன்றும் குடும்பம் என்ற அளவில் பெண்கள் மீதான அதிகாரமும் கட்டுப்பாடுகளும் குறையவே இல்லை. இந்தியக் குடும்பங்களில் இன்றும் ஆண்கள், கடவுளின் தோளில் கைபோட்டுக்கொண்டு இருக்கும் ரட்சகர்களைப் போல தன் எல்லையற்ற அதிகார வரம்பைச் செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

Anonymous Anonymous said ... (1:34 p.m.) : 

Thankyou to Kathavilasam, Vikatan

 

Anonymous Anonymous said ... (1:57 p.m.) : 

நன்றி தான்யா!!!!
...aadhi

 

post a comment