6/30/2005

Image hosted by Photobucket.com
தடுகளை அறுத்தெறிந்தேன்
முத்தங்கள் என்னை
தொந்தரவு செய்யாதிருக்கட்டும்
பிரியமான முத்தத்தில்
தளர்ந்து போகும் ஆன்மாவை
கொன்று போடுவது
அத்தனை சுலபமில்லை.
வெட்டியும் அறுத்தும் கடித்தும்
முத்தத்திற்கான எல்லா வழிகளையும்
அடைக்கிறேன்
இரத்தம் கசிய
சதைகள் தொங்க
வேட்கை ஒய்கிறது.

எனக்கு காதலும் காமமும்
காத்திருப்பும் வேண்டாம்

சண்டைகள் அற்று
ஓய்ந்த போதுகளில்
குற்றச்சாட்டுக்கள் தளர
முத்தமிட எத்தனிப்பாய்
உதடுகளே அற்ற அந்த முகம்
உன்னிடம்
விழுப்புண்களை உண்டாக்குகிறது
உன் வாழ்வில்
கொடும் சித்திரமாய்
உதடுகளற்ற அந்த ஓவியம்


துரோகத்தை சகிக்காது
முடியைத் துறந்து
வெஞ்சினம் தணித்தாள் ஃபிரீடா
தன்னையே அழித்து
பழிதீர்த்துக் கொண்டவள் சில்வியா
காதலுக்காக காதை இழந்தான்
பிரிய வான்கோ
நீ உணர்வாயா இவர்களின் தனிமை
என்னிடத்திலும் இருப்பதை?

வெறிகொண்ட ஆன்மா
இன்பத்தைத் தூண்டும்
எல்லா உறுப்புக்களையும்
அறுத்தெறிய முனைகிறது
~


நன்றி அற்றம் இதழ் 01/2005

Comments on ""

 

Blogger -/பெயரிலி. said ... (1:23 PM) : 

தான்யா,
கவிதையின் கருத்து உங்களுடையது; ஆனால், வாசகன் என்றளவிலே மிகவும் எதிர்மறையுணர்வு மேலோடியிருப்பதாக எனக்குப் படுகின்றது. இயற்கையின் தூண்டுதல் கெடுதலை விளைவிக்கின்றதென்பதற்காக, இயற்கையை வெல்கிறேன் என்ற அர்த்தத்திலே, தன்னைத் தானே தண்டிப்பது போன்றதாகத் தோன்றுகிறது. ஒடுக்குதலுக்கு ஒடுங்குதல் தீர்வாக முடியாதென்று நினைக்கிறேன்.

 

Blogger கயல்விழி said ... (2:30 PM) : 

உணர்வுகளுக்கு அடிமையாகாது அவற்றை அடக்கி ஆள பல வழிகள் இருக்கின்றனவே. அங்கங்களை முடமாக்கி உணர்வுகளை அடக்க நினைப்பது என்பது அந்த உணர்வுகளின் வெற்றியே அன்றி தோல்லிஅல்ல.
சிந்தனை திறன் உள்ள மனிதன் அவற்றை வெல்ல வேண்டுமே தவிர முடமாவது தீர்வாகாது. உணர்வுகளை வெற்றி கொள்ள பல வழிகள் உண்டு. வித்தியாசமான வரிகள். :)

 

Blogger தான்யா said ... (3:12 AM) : 

நன்றி கயல்விழி

பெயரிலி உங்கள் கேள்வி சரியானதே ஆனால் கோபம் எப்போதும் சரியானது இல்லையே அது எதிர்மறையான விளைவுகளையும் உருவாக்குகிறது தானே. நான் இந்தக் கவிதையூடாக சொல்ல வந்தது கவனிக்கப் படாமை உணர்ந்து கொள்ளப் படாமை அல்லது உடலை மட்டுமே முன்னிறுத்துவது எத்தகைய பாதிப்பை அல்லது பிறழ்வை உண்டு பண்ணுகிறது என்பதையே.கண்ணகி முலையை திருகி எறிந்து மதுரையயை எரித்ததுபோல.

மற்றம்படி நீங்கள் எழுதியவையுடன் நானும் ஒத்துப் போகிறேன்.

 

post a comment