2/24/2005

'கற்பை' அழித்தல்

தொடர்ச்சியாக, ஈழப்போராட்டத்தால், பெண்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையால், 'கற்பழிப்பு’ போன்ற சொற்கள் தரும் அதி உச்ச வன்முறையை பெண்களின் மீதான ஒடுக்குமுறையை தவிர்க்க பாலியல்வல்லுறவு, பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்புணர்ச்சி போன்ற சொற்கள் உபயோகிக்கப்பட்டன. பின்னர் பாலியல் வல்லுறவு என்ற சொல்லில் உறவு என்பது உறவை குறிக்கும் என்பதால் அதுவும் தவிர்க்கப்பட்டு பாலியல் வன்புணர்ச்சி மற்றும் பாலியல் வன்முறை போன்ற சொற்களே பாவனைக்கு வந்தன. பெண்ணியத்தில் இவை முக்கியமான மாற்றங்கள். இன்று வெகுஜன பத்திரிகைகள் முதல் தொலைக்காட்சி வானொலி என்று இலங்கை மற்றும் புலம்பெயர் தேசங்களில் -பெரும்பாலும்- கற்பழிப்பு என்ற சொல் பாவனையில் இல்லை அதற்குப் பதிலாய் மேற்குறிப்பிட்ட சொற்களே உபயோகப்படுத்துகிறார்கள்.
‘அழகிய(!) இளம் பெண் கற்பழிக்கப்பட்டாள்’ என்று எழுதும் அதீத புனைவுகளை தவிர்க்கவும் ‘பலாத்காரம்’ என்பது அழகு மற்றும் இன்ன பிற காரணங்களால் நடாத்தப்படுவதல்ல, அது அவர்கள் மீதான வன்முறை என்பதை அழுத்திச் சொல்லவும் இச் சொல் தேவையாய் இருக்கிறது.
அரசியற் காரணங்களால் பெண்களும் குழந்தைகளுமே அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அத்துமீறி பெண்கள் மீது திணிக்கப்படும் ஆயுதமாய் குறி இருக்கிறது. இலங்கையில் க்ருசாந்தி, கோணேஸ்வரி; போன்றவர்களின் மீதான இராணுவ வன்முறைகள் இலங்கையில் பலத்த கண்டனங்களை மட்டும் அல்ல பெண்கள் மீதமான வன்முறை சார்ந்த விழிப்புணர்வையும் உண்டுபண்ணியிருக்கிறது. 1997ம் ஆண்டு கோணேஸ்வரி- என்ற அம்பாறையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயை இராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்தபின், அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்தார்கள்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கலா அவர்கள் சரிநிகரில் இப்படி ஒரு கவிதை எழுதியிருந்தார்கள்:

கோணேஸ்வரிகள்

நேற்றைய அவளுடைய சாவு-எனக்கு
வேதனையைத் தரவில்லை
மரத்துப் போய் விட்ட உணர்வுகளுள்
அதிர்ந்து போதல் எப்படி நிகழும்!?
அன்பான என் தமிழச்சிகளே
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள்!?
ஆகவே வாருங்கள்
உடைகளைக் கழற்றி
உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்
என் அம்மாவே உன்னையும் தான்.
சமாதானத்திற்காய் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளைத் திறவுங்கள்
பாவம்,
அவர்களின் வக்கிரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்.
வீரர்களே வாருங்கள்
உங்கள் வக்கிரங்களை
தீர்த்துக் கொள்ளுங்கள்
என் பின்னால்
என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா எல்லாம்
அவ்வளவோடு நின்றுவிடாதீர்!
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக் கூடும்
ஆகவே
வெடிவைத்தே சிதறடியுங்கள்
ஓவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி
புதையுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.
சிங்கள சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை
0

இந்தக் கவிதை இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் சர்ச்சைக்குள்ளாகியது. இதில் உபயோகித்திருக்கிற வார்த்தைகள் இனத்துவத்துக்கு அழுத்தம் கொடுப்பதோடு மட்டுமல்லாது தமிழ் தேசியவாதத்துக்கும் இடம் கொடுக்கிறது என்பதே பலரது கருத்தாக இருந்தது. ஆனால் இந்தக் கவிதை தன் இனப் பெண்ணுக்கு நடந்து முடிந்து விட்ட கொடுமையை அதுவும் தமிழ் என்பதாலே நிகழ்ந்ததால் அவருடைய கோபம் தேசியவாதமாய் ஆகிவிடுகிறது. இது, தனியே ஈழத்துத் தமிழ்ப் பெண்களுக்கு மட்டும்தானா இடம் பெறுகிறது என்று கேட்கலாம் ஆனால் தன்னுடைய எல்லைகளுக்குள் ஏற்படும் விடயங்கள் மிகுந்தை வீச்சைக் கொடுக்கும். அந்த வகையில் இந்தக் கவிதை மிகவும் உக்கிரமானது.

இலங்கையில் இச்சம்பவங்களின் பின்னணியில், பாரபட்சமற்ற சொற் பாவனைகள் மிக தீவிரமாக பின்பற்றப் பட்ட போதும், மொழியில், கற்புசார் மதிப்பீடுகள் அற்ற தன்மை தமிழ் நாட்டில் நிகழவில்லை. வெகுசன மற்றும் இலக்கிய இதழ்களிலும்கூட “கற்பழிப்பு” என்ற சொல்லே பாவனையில் இருக்கிறது. உதாரணமாக பெப்ரவரி (இதழ் 62) காலச்சுவட்டில், சேரன் ஆங்கிலத்தில் எழுதிய “மீண்டும் கடலுக்கு” (பக். 26) கட்டுரையைத் தமிழ் படுத்திய திவாகர் ரங்கநாதன் “...அகதி முகாம்களில் கற்பழிப்புகளும் பாலியல் தொந்தரவுகளும் தலை தூக்கியிருப்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன” என்று மொழிபெயர்த்திருப்பார். Rape என்பதை தமிழ் படுத்தையில் கற்பழிப்பு என்று உபயோகித்திருக்கிறார். அதை வாசித்தபோது சங்கடமாக இருந்தது, இதற்கு முன்னும் கூட உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் இப்படியான வார்த்தைகளையே பயன்படுத்தியிருந்தார்கள். இப்படியான சொற்களை இத்தகைய தீவிர (அறிவசார்) இலக்கியப் பத்திரிகைகளில் பார்க்கிறபோது உறுத்துகிறது. இந்த உறுத்தல் இயல்பாக வருகிறது. தமிழ்நாட்டில் எழுதுகிற, பெண்ணிய சிந்தனையுடைய, எழுத்தாளர்களுக்கு இது உறுத்துவதில்லையா?

நவீனம் என்றும், சுனாமி மற்றும் இன்ன பிற விடயங்களிலும் மற்றவர்கள் போல் அஜாக்கிரதையாய்(!) இல்லாது சமூக விழிப்புணர்வைக் காட்டி வருகிறது காலச்சுவடு. குறிப்பாக பெண்கள் மீதமான வன்முறை பற்றியும்; அவர்களின் படைப்புக்கள் மூலம் பெண்களுடைய தனிமையை ‘வியாபார நோக்கமின்றி’ சமூக அக்கறையுடன் புத்தகமாய் பதிப்பித்தும் வருகிறது. அப்படியான ஒரு நிறுவனத்தின் படைப்பில் வரும் இவ்வகையான முரண் மிகவும் நெருடுகிறது.

தமிழ் நாட்டு படங்கள் இலக்கியம் இன்ன பிற விடயங்கள் ஈழம் மற்றும் புலம் பெயர் தேசங்களில் ஏற்படுத்திய மாறுதல்கள் அதிகம். பெண்களுக்கெதிரான மிக முக்கியமான இந்த பிரச்சனையை ஏன் பெண்ணியவாதிகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் எதிர்க்கவில்லை? இது அவ்வளவு பெரிய விடயம் இல்லையா என்ன?.
P.C. சிறீராமின் “வானம் வசப்படும்’ என்ற படம் பார்க்க நேர்ந்தது. அதில் கல்யாணமான பெண் ஒருத்தி பலாத்காரப்படுத்தப்படுவாள், அவளை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பது தான் கதை. தமிழ் சுழலில் மிக வித்தியாசமான முயற்சிதான் ஆனால் அதில் தொடங்கியதில் இருந்து முடிவுவரை எத்தனை முறை “கற்பழிப்பு” என்ற சொல் வருகிறது என்டு எண்ணிக் கொண்டிருந்தேன். கற்பு என்ற அடிப்படையை வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை புனிதப்படுத்துகிறார்கள் அல்லது பார்ப்பவர்களை (convince) சமாதானப்படுத்துகிறார்கள், அவள் ‘கெடுக்கப்பட்டாலும்’ புனிதமானவள்தான் என்று. கற்பு என்கிற கோட்பாட்டை நியாப்படுத்துவதன் மூலம் அதை வைத்திருக்கவே விரும்புகிறார்கள்.
பெண்களின் மீது தீணிக்கப்பட்டு வரும் கற்பு சார் மதிப்பீடுகளோ அவற்றை அவர்கள் உயிரைக் குடுத்தேனும் காப்பாற்ற வேண்டும் என்கிற நிலைப்பாடுகளோ மாறவில்லை. இது ‘கற்பழிப்புத்தானே’ ஒழிய அதை அவளாய் விரும்பி போகாத வரை அவளில் குற்றமில்லை. அப்போ திருமணத்துக்கு முன்னோ பின்னோ கணவனில்லாத ஒருவனிடம் அல்லது பலருடன் உறவு கொண்டவர்கள் எல்லாம் கற்பற்றவர்களா? கற்பிற்கான நிர்ணயம் எது, இப்படியான ஒழுங்குகளையும் சமூக கட்டுமானங்களையும் காப்பற்ற வேண்டியவர்கள் பெண்கள்தானா என்பனபற்றியெல்லாம் கேள்வி கேட்கப்படுவதில்லை.

வைரமுத்து ‘இந்த சிறுக்கி மகளின்(முதல்வன்)’ என்று பாட்டு எழுதுகிறார். சிறுக்கி என்பது ‘கீழ்த்தரமானவள் அல்லது நடத்தை கெட்டவள்’ என்று க்ரியா தற்கால தமிழ் அகராதி சொல்லுகிறது,' இச்சொல்லை ‘செல்லமாய்’ சொல்லுகிறார் வைரமுத்து. இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லவில்லை ஆனால் இதைப் பயன்படுத்தும் விதம் மனைவி படுக்கையில் வேசையாய் (பாலியல் தொழிலாளி) இருக்க வேண்டும் என்பதற்கு ஒத்த நிலைப்பாடே இது. ஈழத்துக் கவிஞர் சேரன் “ஒரு வைன் கிளாஸ்/மெல்லிய பெண்ணின் சிறு மார்பகம் போல.” என்று வைன் கிளாசோடு ஒப்பிடுவார். அசைகின்ற பொருளோ அசையாப்பொருளோ எதோடாவது பெண்களை அவர் உடலை, உறுப்புக்களை ஒப்பிட்டாக வேண்டுமா?

இறுதியாய், இந்த ‘கற்பழிப்பு’ப் போன்ற வார்த்தைகளில் உள்ள அரசியலையும் பெண் மீதமான வன்முறையையும் புரிந்து எதிர்க்கவும் அதை உபயோகப்படுத்தாமல் செய்யவும், நவீன தமிழ் இலக்கியப் பத்திரிகைகள் முயற்சிகளை எடுக்கவேண்டும்.
இவற்றாலெல்லாம் எந்த மாறுதல்களையும் கொண்டு வந்துவிட முடியாதுதான் ஆனால் இப்படியான மொழியில் உள்ள பாரபட்சங்களை நீக்குவதூடாக மொழியிலுள்ள ஒடுக்குமுறையையாவது மாற்றி அமைப்போம்.

2/14/2005

Profile 1: அம்பை (1970-)

Image hosted by Photobucket.com

ஒரு பெண் இன்னொரு பெண்ணோட மார்பகத்தை ஒரு ஆண் பார்க்கிற மாதிரியோ இல்ல தாய்மையோடு சம்பந்தப்பட்டதாகவோ தான் பாத்திருக்கா. உடம்பைப் பத்திய இந்தக் கருத்தே மாறணும். ரு பெண் இன்னொரு பெண் உடம்பை உணரணும். பெண்ணோட உடம்பை மறுவாசிப்பு செய்யணும்.
(அம்பை-காலச்சுவடு நேர்காணல்)
அம்பை என்கிற சி.எஸ்.லக்ஷமி தமிழின் மிக முக்கியமான பெண் படைப்பாளி. இவரின் எல்லாப் படைப்புக்களையும் வாசிக்கையில் மிகவும் பிரமிப்பாக இருக்கும். இன்று கூட பல பெண்ணியப் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதரணமாய் அம்பை தொட்டுச் சென்றிருக்கிறார். உறவு-காதல்-திருமணம்-அரசியல்-இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பொதுவாக (வெகுசன நாவலாசிரியை) லக்ஷ்மி போன்ற அவர் காலத்துப் பெண்கள் குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்க அம்பை பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்துள்ளார். அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் விமர்சித்திருப்பார்கள் என்று எண்ணாமலிருக்கவும் முடியவில்லை. இதுவே தலித் பெண் எழுதியதென்றால் மிகமோசமான எதிர்வினைகளை சந்திக்கவேண்டி இருந்திருக்கும் என்பதும் உண்மை.
அம்பையின் முதலாவது தொகுதியான சிறகுகள் முறியும்(1976) பெண்ணிய மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய மிக முக்கியமான பிரதி. ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள். அவற்றைப் பற்றி (இவரது) காலச்சுவடுப் பின்னட்டைக் குறிப்பில் கற்பனைக் கதைகள் என்று எழுதியிருக்கிறார்- அது தேவையில்லை என்று தோன்றியது. மிக யதார்த்தமாய் சென்று கொண்டிருக்கும் கதைகளை உண்மையில்லை இது வெறும் கற்பனை தான் என்று வாசகர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் தான் பெண்களின் எழுத்தாய் இருக்கிறது என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவர் ஒருவர் சொல்லுவார் அம்பை கருத்தை வைத்து கதைகளை கட்டுகிறார், அதை உணர்வு பூர்வமாய் எழுதுவதில்லை என்று. அவர் கருத்துக்காக எழுதினாலும் அவை ஆழமானவை. சில முயற்சிகள் தோல்வியடைந்தும் இருக்கிறது ஆனாலும் அவருடைய எழுத்து ஆளுமை சொற் பிரயோகங்கள் கருத்துப் போன்றவை மிகவும் திடமாய் வெளிப்பட்டிருக்கிறது.
சக்கர நாற்காலி என்ற கதை பணக்கார இளைஞர்கள் பேசும் புரட்சியை குடியுடன் கூடிய மேற்தட்டு வர்க்கப் பெண்கள் பேசும் பெண்ணியத்தை மற்றும் ஆண் உறவுகளை சாடுகிறது. வெளிநாடுகளில் படித்துவிட்டு வந்த மார்க்சிய பிரதிகளிலிருந்தும் எழுத்துக்களிலிருந்தும் சொற்களை உபயோகிப்பதும், புரட்சி பேசுவதும், குடித்துத் திளைப்பதும் எவ்வளவு போலியானது என்பதை சித்தரிக்கும் சிறுகதை. எல்லாக்கதைகளையும் விட இது தான் உறவு சார் கேள்விகளையும் எழுப்புவதாய் படுகிறது. இவர்களுக்குள் கேள்வி கேட்கிற ஒரு பெண், வறுமையே மிகப் பெரிய ஆசானாய் இருந்து அவளை உருவாக்கியது.
“ஆக்ஸ்போர்ட்டில் படித்திருந்தான் நம்பியார். போகும் போது பத்து ஸ_ட்டுக்கள் தைத்துக்கொண்டு போனானாம். திரும்ப வரும் போது பைஜாமா குர்த்தாவுடன் வந்தான். பல்கலைக்கழகத்தின் மிகத் தீவிர இடதுசாரி அவன். அவன் பீடி தான் குடித்தான். சிலசமயம் கிழிந்த குர்த்தாக்களையே அணிந்து கொண்டான். அவனுடைய ஆக்ஸ்பேட்டு பாணிகளையும், அம்பாசிடர் காரையும் தான். அவனால் விட முடியவில்லை. வாயில் பீடியுடன் ஆங்கில ‘ர”கரங்களை அழுத்திக் குழைத்துத்தான் அவன் பேசினான். அவனால் மலையாளத்தையும் ஹிந்தியையும் பயில முடியவில்லை. தன் பீடி, குர்தா, பைஜாமா மூலமே கேரளத்துப் பாட்டாளி வர்க்கத்தைத் தன் சிந்தனா முறைக்குத் திருப்ப முடியும் என்று அவன் மனதார நம்பிக்கொண்டிருந்தான்.” இது ஒரு கதாபாத்திரத்தின் மனப்போக்கைச் சொல்கிறது கூடவே ஒரு வசதி குறைந்த பெண்ணுடன் வாழ்வதும் புரட்சி என்று குழம்பும் ஒரு பகுதியினரை பற்றியது சக்கர நாற்ககாலி என்ற இந்தக் கதை. அதற்குள் வாழ்வை நேர்மையாய் எதிர்கொள்ளும் பெண் என்று கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தமாய் பின்னப் பட்டிருக்கிறது.
“ஸஞ்சாரி” என்ற கதை இரு காதலர்களைப் பற்றிய கதை. காதலர் என்றால் ஒர் படைப்பாளியான பெண்ணைப் பற்றிய கதை. அவளுடைய பிரமண காதலன் பற்றிய பிம்பங்கள் மிகுந்த எள்ளலுடன் வெளிப்பட்டிருக்கும். ஓர் சாதாரண சம்பவம் கூட எம்படியான ஓர் பிம்பத்தை எதிராளியிடம் உண்டு பண்ணுகிறது என்பதைச் சொல்லுகிறது இந்தக் கதை. ரங்கா என்கிற பிராமணப் பையன் அவனுடைய காதலி ருக்மா. அவர்களுக்கிடையிலான மனப்போக்கை உள்ளே என்ன நினைக்கிறார்கள் வெளிய என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் எழுதும் போது, அது எவ்வளவு போலியானது என்றெல்லாம் உணர முடியும். அவன் ஒரு நல்ல பிராமணப் பையன் என்று தான் கதையை ஆரம்பித்திருப்பார், அவன் பூணூல் எல்லாம் களைந்திருந்தாலும் அவன் ஓர் நல்ல பிராமணப் பையன்.
ரங்கா, ”ருக்மா நீ அடிக்கடி குமாரோட பேசிறதும், பழகறதும் எனக்குப் பிடிக்கேல்லை”
அப்ப அவள் மனசுக்குள்ள நினைக்கிறதா வரும் “கட்டாயம் உன் அப்பாவுக்கு அவர் மனைவி வேற ஆம்பளையைப் பார்த்திருந்தால் பிடித்திருக்காது. அவர் அப்பாவுக்கும் அப்படியே. அவர் அப்பாவின் அப்பாவுக்கும்..” அப்ப அவன் யோசிப்பான் ”எப்படிச் சொல்லுவது? உன் உடம்பில் ஒரு மிருக அழகு இருக்கிறது. உன் வாழ்வில் எத்தனை மேடு பள்ளங்கள்? நீ என்னை ஏன் விரும்புகிறாய்? நான் ஏமாந்தவனா? நினைத்தாலே ரத்தம் கொதிக்கிறது. குமாரோடு நீ கதைப்பது உன் பின்னால் என்னை ஓடிவரவைக்கவா? நான் உன் செல்ல நாயா?” இப்படிப் போகும். இன்றைய நவீன ஆண் எழுத்தாளர்களுக்கு தங்களுடைய மனைவி பெண்ணிய சிந்தனை கொண்டவள் எண்டு காட்டவும் வேண்டும் ஆனா அவள் அவர்கள் நினைக்கிற எல்லைகளைத் தாண்டவும் கூடாது. எல்லாப் பேச்சுக்குப் பின்னாலும் அவர்களில் தங்கியிருக்கிற பெண்களாய் இருப்பது அவசியமாய் படுகிறது. இந்த மாதிரியான வாழ்க்கையை உறவுகளை இந்தக் கதை பேசுகிறது. சிலவேளைகளில் ஆண்களுக்கு ஏன் பெண்களுக்குக் கூட கொஞ்சம் கூட போல தோன்றலாம் ஆனால் ருக்மாவுக்கும் ரங்காவுக்கும் இடையில் இடம்பெறும் உரையாடல்கள் எண்ணங்கள்-முரண்கள் உறவில் முக்கியமானவை, சிந்திக்கத் தூண்டுபவை.
கடைசியாக “சிறகுகள் முறியும்” என்ற சிறுகதை குடும்பம் என்ற பலமான அமைப்புள் அமிழ்ந்து அல்லது அழிந்து கொண்டிருக்கிற ஒரு சுயம் அல்லது அவள் வளர்த்து வந்த குணங்கள் என்று கூடச் சொல்லலாம். கருமியான கணவனின் இயல்புகள் எப்படி எல்லாம் ஓர் பெண்ணின் வாழ்க்கையை மாற்றிப் போடுகிறது என்பதே கதை. இந்தக் கதையை நிச்சயமாக சாதாரணமான நல்ல வாழ்க்கையை வாழ்கிற எந்தப் பெண்ணானாலும் வாசிக்கையில் உணர முடியும். அப்படியான அவர்களது வாழ்க்கையைப் பேசும் கதை.
**********
அம்பையின் முதலாவது தொகுதி சிறகுகள் முறியும். இந்தத் தலைப்பே நிலையில்லாமையை சொல்கிறது. போதுவாக பெண்களைப் பற்றி எழுதிய கவிஞர்கள் எல்லாம் விட்டுச் சிறகடிப்பாய், சிறகு முளைக்கும், சிறகு விரியும் என்று சிறகு என்பதே சுதந்திரமாய் சொல்வார்கள் அம்பை சிறகு முறியும் என்று பறக்கும் போதே சொல்லிவிடுகிறார். அடுத்தது வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988). வீடென்பது சுதந்திரம் வீடென்பது உனக்கான இடம் ஆனால் அதே நேரம் அங்கு தான் ஓர் மூலையில் சமையல் அறையும் இருக்கிறது என்பதையும் அங்கு தான் ஒர் பெண்ணின் வாழ்வு தள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்கிறது இந்தத் தலைப்பு. இவ்விரு தொகுப்புகள் போலல்லாது, காட்டில் ஒரு மான் (2000) பழைய ஒப்பிடல்களுக்குத் திரும்பியுள்ளது என்று தோன்றுகிறது. ஏனெனின், இதில் பெண்ணை மானுடன் ஒப்பிடும் அந்த பழைய உவமைகள் வந்துவிடுகிறது, பெண்ணை மானாக ஒப்பிட்ட அந்த மரபுக்குள் மீண்டும் அம்பை வருகிறார். அட்டைப் படங்கள் கூட மாறுகிறது. முன்பிருந்த தன்மை போய், காட்டில் ஒரு மானுக்கு வீணை, மான் என்று ஒருவகையான பெண் தன்மை என்கிற உணர்வை வலிந்து உண்டு பண்ணியிப்பார். புதிப்பகத்தை குறை கூற முடியாதவாறு அம்பை அவற்றில் தானே கவனம் செலுத்துவதாய் சொல்கிறார். தற்பொழுதைய அவருடைய படைப்புக்கள் பின்நோக்கிச் செல்கின்றன என்றே சொல்லலாம். வழமையான பெண்ணிய நோக்குப் போய், இருக்கிற நேரத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தன்மை வந்திருப்பது போல தோன்றுகிறது. ஒரு ஓய்வு எழுத்து என்று சொல்லலாம். தான் எதிர்த்த மேம்போக்கான பல விடயங்களை இன்று அம்பை தானே வலிந்து எழுதுவது போல் தெரிகிறது. ஆரம்ப உயிர்மையில் தானும் நண்பியும் ‘தண்ணியடிக்க’ கடை தேடினதாய் ஒரு கதை வரும். இவை சொல்லுவது அவர் விமர்சித்த அந்த மேட்டுக்குடியினர் புரட்சி பேசும் தன்மையை அவர் சென்றடைந்ததையே. அம்பையை படிக்காமல் எந்த ஓர் பெண் எழுத்தாளரும் வந்து விட முடியாது என்கிறளவு அவரது கதைகள் கட்டுரைகள் விமர்சனங்கள் அளுமை செலுத்தியிருக்கிறது.
அதே போல அம்பையின் மூன்று புத்தகங்களுக்கும் இடையிலான இடைவெளி 12 வருடங்கள். இது தான் பெண்களின் படைப்புக்கும் ஆண்களின் படைப்புக்குமான மிகப் பெரிய இடைவெளி என்று தோன்றுகிறது. அவர்காலத்து எழுத்தாளர்கள் நாவல், சிறுகதை, நாடகம் என்று பல புத்தகங்கள் போட்டிருக்கிறார்கள். அம்பை இதுவரை 3 சிறுகதைத் தொகுதிகள் தான் வெளியிட்டிருக்கிறார்.
இன்று இவரோடும் படைப்போடும் நிறைய முரண்கள் ஏற்பட்டாலும் அம்பையின் இடம் பெண்ணியத்தில் மிகவும் முக்கியமானது. இவரின் படைப்புக்கள் எழுப்புகிற அல்லது தூண்டுகிற சிந்தனைகள் இன்னும் பல எழுத்தாளர்களை உருவாக்கும் ஆளுமை செலுத்தும். அவரை நெருங்கையில் ஏற்படும் முரண், தூரே இருந்து வாசிக்கையில், சிறிது சிறிதாய் என்னை அம்பை என்கிற படைப்பாளியின் படைப்புகளை மட்டுமே பார் என்பது போல இழுத்துச் செல்கிறது.
***