4/14/2005

கனிமொழி வெறும் கவிஞை மட்டுமே‘கனிமொழி வெறும் கனிமொழி மட்டுமே அல்ல. கலைஞர் கருணாநிதியின் புதல்வி. எந்த ஒரு அப்பா, மகளின் உறவிலேயும் நெருக்கம் அதிகம் இருக்கும். அது நிச்சயம் அப்பா, மகன் உறவைவிடக் கூடுதல். கனிமொழியின் அப்பா பகுத்தறிவாளன், கவிஞன், கலைஞன், திரைப்படவசனகர்த்தா,அரசியல்வாதி, முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர். தொடர்ந்து போராடுகிற அவருடை ய குணமும், தொடர்ந்து ஈடுபடுகிற அவருடைய தமிழும் முக்கியமானவை. அப்பா நெய்து பாதியில் நிறுத்தியிருக்கிற சேலையை, அவர் திரும்பிவருகிறவரை தறிக்குழியில் இறங்கி நெசவு செய்யாத கைகள் எந்த நெசவாளியின் குடும்பத்தில் இருக்கும். ஒரு ஓவியனின் தூரிகையை உபயோகிக்காத அவனுடைய வாரிசுகள் உண்டா. மகாராஜபுரம் சந்தானத்தின் சங்கீதம் அவருடைய மகனின் குரலில் தானே வழிய வேண்டும். பட்டாளத்தானின் குடும்பத்தில் அந்த முரட்டுப் பச்சை உடைகளுக்குத் தொடர்ந்த பாரம்பரியம் வந்து விடுகிறது. கனிமொழிக்கும் அந்த நெசவு, அந்தத் தூரிகை உபயோகம், அந்த சங்கீதம், அந்த பச்சை உடை வாய்த்திருக்கிறது.”
- கனிமொழியின் “கருவறை வாசனை” தொகுப்பின் முன்னுரையில் கல்யாண்ஜி (1995)


01.
எந்த ஒரு அப்பா மகளுக்கும் இடையிலும் ஆத்மார்த்தமான உறவு இருக்கலாம் இல்லாமலும் போகலாம் அதை ஒரு முன்னுரையில் அடித்துச் சொல்ல வேண்டிய அளவில்தான் கனிமொழியின் கவிதைகளை கல்யாண்ஜி பார்க்கிறார். கருணாநிதி என்கிற பிம்பத்தை அவர் கனிமொழியின் கவிதைகளுக்கு கொடுப்பதன் ஊடாக கனிமொழியின் திறமைக்கு கலைஞரே காரணம் என்று இவருக்குப் பதிலாக அவரைப் பற்றியே புகழ்ந்து இவருக்கு போகவேண்டிய பாராட்டை கருணாநிதிக்கு கொடுத்துவிடுகிறார். கனிமொழியைப்பற்றி எழுதுகையில் மட்டும் அப்பா மகள் உறவு வந்து விடுகிறது. வேறெந்த எழுத்தாளரின் மகள் அல்லது மகன் அப்பாவின் தூரிகையை தொடர்ந்தார் என்று தெரியவில்லை. தமிழில் எழுதியவர்களைப் பார்த்தால் அப்பாவை தொடர்ந்த எழுத்தாளர்கள் என்று பெரிதாய் பட்டியல் தர முடியாது, அப்படியிருக்க கல்யாண்ஜியின் இந்த விமர்சனம் கனிமொழியை அவரின் அப்பாவின் தொடர்ச்சியாய் பார்க்கச் சொல்லுகிறது. கனிமொழி ஆணாக இருந்திருந்தால் வாரிசு என்று எழுதி; சந்தோசப்பட்டிருப்பார் வண்ணதாசன் (கல்யாண்ஜி) ஏனெனின் அவருடைய முன்னுரையில் பாரம்பரியமாக கலைகள் மகனுக்கு கடத்தப்படுவதாகவே எழுதியிருப்பார். கனிமொழி மகளாக இருப்பது விபத்தாகிவிட்டது. கனிமொழியின் முன்னுரைகளில் மட்டும் கனிமொழி என்கிற படைப்பாளியின் படைப்புக்களை பின்தள்ளி கருணாநிதி என்கிற அரசியல்வாதியை இழுத்துவிடுகிறார்கள். சங்கீதத்தையோ, ஓவியத்தையோ, இலக்கியத்தையோ, தகப்பனிடமிருந்து பிள்ளைகள் எடுத்துக்கொள்கிறார்களா என்ன? இத்தனைக்கும் தகப்பன்கள் கூட அதை விரும்புவார்களா என்று தெரியவில்லை. எழுத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக இருந்தால் அப்படி எதாவது செய்ய விடுவார்களோ என்னவோ அப்படியில்லாத போது இப்படியொரு விமர்சனம் அநாவசியமானது. கலைகள் எல்லாம் வழிவழி வரவேண்டும் என்று நினைப்பது கூட ஒரு வன்முறையான விடயம் தான்.
அவருக்கு எழுதும் முன்னுரைகள் அநாவசியமாக அவரைத் தூக்கிப் பிடிக்கிறது. அவற்றை கனிமொழி தவிர்த்துக் கொள்ளலாமே ஒழிய அவரின் மகள் என்பதாலேயே பேசப்படுகிறார் என்று சொல்ல முடியாது. கவிதை எழுதுவதை உயிரியலுடன் ஒப்பிடுவது எவ்வளவு அபத்தம் என்பதை மென்மையான உறவுகளை தன் கதைகளின் சித்தரித்த வண்ணதாசன் அவர்கள் உணரவில்லைப் போலும். இவற்றை வாசிக்கும் போது ஓரு பெண் தானாய் வளர்த்துக் கொள்ளும் திறமைகள்கூட எப்படி தகப்பன், கணவன், பிள்ளைகள் என்று அவர்களைப் போய் சேர்கிறது என்ற எண்ணமும் வந்து போகிறது.
இவ்வகையான விமர்சனங்களை பல படைப்பாளிகள் நீண்ட நாட்களாய் எதிர்நோக்கி வருகிறார்கள். ஒரு படைப்பாளியின் மகளாக மனைவியாக நண்பியாக இருந்தால் அவர்தான் எழுதி கொடுத்திருப்பார் என்று சர்வசாதாரணமாக சொல்லப்படுவதுண்டு அல்லது இந்த எழுத்துக்கு பின்னணி அவர்தான் என்று அவர்மேல் இவர்களுக்கான பாரட்டைப் போடுவது. இதைத்தான் கனிமொழி சல்மா மற்றும் மாலதிமைத்ரி போன்றவர்களுக்குப் போடுகிறார்கள்.

02.
கனிமொழி கருணாநிதியாக அறியப்பட்ட கனிமொழி அரவிந்தனின் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. அவர் ஒரு பத்திரிகையாசிரியராகவும் தனக்கான ஒர் இடத்தை சமூகத்தில் தேடுபவராகவும் இருந்த போதும் தொகுப்புக்களின் முன்னுரைகள் அவரை ஒரு சுயமதிப்பற்ற தனித்து இயங்கமுடியாத ஒரு பெண் எனும் பிம்பத்தையே தருகின்றன. கலைஞரை கனிமொழியுடன் ஒப்பிட்டாலும் கனிமொழியின் எந்த கவிதையிலும் கலைஞரின் நெடி இல்லை. பல கவிதைகளில் தனிமை மற்றும் தன் தாயோடான பிணைப்பையே கனிமொழி பேசுகிறார். “கருவறை வாசனை” என்கிற தலைப்புக் கூட தாயோடான பிணைப்பையே காட்டுகிறது:

“ஊரோடு உறவுகள் நீர்த்துப்போய்,
என் ஊர் வாசனையே தெரியாத
ஓரு தூரதேசத்தின், தீப்பெட்டிச்
சொர்க்கத்தில் சொருகிக் கொண்ட போதும்,

தன் இளம் இருட்டுச் சுவர்களுக்குள்
என்னைப் பத்திரமாய்ச் சீராட்டிய வீடு,
அம்மாவின் பழைய சேலையைப் போல
மெத்தென்று மனதைத் தழுவும்.”

பல கவிதைகள் அப்பா என்பதை ஒரு அதிகாரமாகவே காட்டுகிறது. அதை அவரது அப்பா என்று கொள்ள வேண்டிய அவசியமேதும் இல்லாத போதும் முன்னுரையின் அழுத்தத்தால் அப்படி ஒரு பார்வையையும் முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது. பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் அப்பாவுடைய பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆண் தேர்வுகள் கூட அப்பாவிடமிருந்தே ஆரம்பிக்கிறது. அப்பா பெண் பிணைப்பையும் மீறி கீழ்படிதலில் அதிகாரம் அங்கிருந்தே தொடங்குகிறது. அவர்கள்தான் கீழ்படிதலை கற்றுக் கொடுக்கும் முதல் ஆசான்கள். அவர்களை எதிர்த்தோ அவர்களை மீறியோ ஒரு பெண் செயற்பட முடியாத நிலமை இருக்கிறது.


‘அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன், சில
நண்பர்களைத் தவிர்த்தேன்,
சட்டைபோட்டுக் கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று.’

இந்தக் கவிதை பொதுவான எல்லாப் பெண்களின் வாழ்விலும் நடக்கக்கூடிய சம்பவங்கள் அதைக் கோர்க்கும் போது அதிகாரம் அப்பாவிலிருந்தே நுழைகிறது. அப்பாவுடனான பிணைப்பே அதிகாரம் என்று கொள்ளலாமா?.
கனிமொழியின் “கருவறை வாசனை” என்ற நூலை வாசித்தால் அவர் கருணாநிதியாலே பேசப்படுகிறார் என்ற குற்றச்சாட்டை வைக்க முடியாது. இவருடைய கவிதைகளில் சலிப்பும் தனிமையும் தான் யார் என்ற தேடலுமே பேசுபொருளாய் அமைந்திருக்கிறது. பெண் எழுத்தில் உடல்சார்ந்த விடயங்களை பேசுகிறார்கள் என்று கூக்குரலிடும் கூட்டம் கனிமொழி மற்றும் சுகந்தி சுப்ரமணியம், உமாமகேஸ்வரி போன்றவர்கள் எழுதிய அவர்களது வாழ்வு பற்றிய சலிப்பு அடங்கிய கவிதைகளை விமர்சனமாக எடுத்துக் கொண்டதில்லை.

ஒரு இடத்தில்,

வம்சம் வளர்க்க,
பெருக்க, பொங்க
விளக்கேற்ற,
கழுவ, துவைக்க,
பூத்தொடுக்க,
துணையாய் வருவாள்
மருமகப்பொண்ணு...
ஆனால் உன்
ஏட்டடிக்கு எட்டடி
ராஜ்யத்தில்
இரண்டு ராணிகளுக்கு
இடமுண்டா?

என்று இந்தக் கவிதை இருதாரமுறையை கேள்விக்குட்படுத்துகிறது. இவற்றையெல்லாம் வாசிக்கும்போது அவரைப் பாதிக்கிற விடயங்களை மட்டுமே அவர் எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது. இவரின் பல கவிதைகள் துணுக்குகள்போல் மிகச் சிறியவை, இவருடைய கவிதைகள் சில சில இடங்களில் முறிகிறது ஆனாலும் இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகளுடன் பார்க்கும் போது அவருடைய “அகத்திணை” கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் நஞ்சுண்டன் அதீதமாக புகழ்ந்த போதும் ஏதோ தமிழகத்தில் கனிமொழியை விட்டால் வேறு படைப்பாளியே இல்லை என்ற மாதிரி ஒரு உண்ர்வைத் தந்த போதும் அந்தத் தொகுப்போ கவிதைகளோ அத்தனை முக்கியமாய் எனக்குப் படவில்லை. அவை வலிந்தெழுதியது போன்ற உணர்வையே தந்தன. பெண்-தாய்மை-தனிமை போன்ற விடயங்களை மீறி சில அரசியல் சார்ந்த கேள்விகளையும் கனிமொழியின் “கருவறை வாசனை” என்ற தொகுப்பு எழுப்புகின்றது.

உதாரணமாக “வேர்கள் உணராத வலிகள்” என்ற கவிதையை இப்படி முடித்திருப்பார்:

அவரது ரோஜாப்பூ
நிறத்திற்காகவும்,
பளீர் புன்னகைக்காகவுமே
அடுத்த தேர்தலில்
ஓட்டுப் போடப்போகும் மக்கள்....

என் வேர்கள் உணராத வலிகள்
அழுத்த நான்...!

அவர் அரசியலை அது சார்ந்த விடயத்தை தன் தகப்பனுடன் ஒப்பிட்டு –எழுத முடியாத ஒரு சூழலில் அப்படி- எழுதினால்தான் எதிர்ப்பா? நேரடியாய் நான் எதிர்க்கிறேன் என்று எழுதவேண்டுமா? அவருடைய பல கவிதைகள் அவருடைய அப்பாவிலிருந்து கனிமொழியை விடுவித்தே பாக்க முடியும் என்பதையே காட்டுகின்றன.
கனிமொழியின் கவிதைகள் அவருடைய தந்தையின் பாணியில் எழுதப்படவுமில்லை. கருணாநிதி அவர்கள் எத்தனை நவீன கவிதைகள் எழுதியிருக்கிறார்?. அவர் எழுதுகிற மாதிரிக் கவிதைகளை இப்பொழுது கனிமொழி எழுதினால் அவர் கருணாநிதியின் மகளாய் இருந்தாலும் பேசப்பட்டிருக்கமாட்டார் என்பதே உண்மை.

நம்பிக்கைப் பிரதிகள்

எங்கள் வீட்டு மொட்டை மாடி
பிரம்புச் சாய்வுநாற்காலி
கருத்த வானம் நிலவொளி
சாலை ஓரத்து இளவட்டங்களாய்
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
திண்ணை தூண் முற்றம்
என்றிருந்த எதிர் வீடு
இன்று இரும்புக் கம்பிகளாய்
வான்நோக்கி வளர்ந்தபடி,
காலம் காலமாய் உலகில்
எத்தனை மாற்றங்கள்!

வானத்து மேகத் திட்டுக்கள் போல்
பனி பூத்த உலகம்
இயற்கையோடு முரண்படாத மனிதன்
முதல் காமம் தணித்துச்
சொன்னான் ‘கடவுளின்
முதல் பாவம்-பெண்’
நூற்றாண்டுகள் ஓடின
பூமியில் கீறல்கள்
என்மீது வடுக்கள்.

பந்தயங்களில் பணயமாக்கப்பட்டேன்
கோயில்களில்
விக்கிரங்களாக்கப்பட்டேன்
எனக்காகப் போர் தொடுத்தார்கள்
கவர்ந்தவனிடமிருந்து மீட்டார்கள்
காவியம் படைத்தார்கள்
உடமையாய் உரியவளாய்
உயிரற்ற ஜடப்பொருளாய்
ஆகிப்போனேன்.

வாழ்க்கையோ உலைக்களம்
பாதையெங்கும் சிதைகள்
ஆங்காங்கே பெண் மாயை
ஒழிக்க வாளுருவிய கூட்டங்கள்
முன் அறையில் எனது
முதல் சுயம்வரப் படலம்
பற்றிய பேச்சுவார்த்தைகள்
மனம் பாடியது- சிலிர்த்துச்
சிறகு விரிக்கும் பட்டுப் பூச்சிகள்
என்னுள் நாளை பற்றிய
நம்பிக்கைக் கனாக்கள்
இன்னும் விரல் பற்றும்
குழந்தைகளாய் நாங்கள்.03.
ஒருமுறை காலச்சுவடு இதழில் பிரம்மராஜன் அவர்கள் குட்டிரேவதியை விமர்சிக்க கனிமொழி மாதிரி கவிதைகள் எழுதக் கூடாதா என்கிற தொனியில் ஏதோ எழுதியிருந்தார் (இதழ் கைவசம் இல்லாததால் அவர் சொன்ன அதே வரிகள் கையாளப்படவில்லை). அதைப் பார்த்தபோது தான் கனிமொழிமேல் கோபமாய் இருந்தது, ஒரு வரியிலாவது அவர் அதை எதிர்த்திருக்க வேண்டாமா. யார்போல் கவிதை எழுதுவது என்று கற்றுக் கொடுக்கும் இடத்திலா குட்டிரேவதி இருக்கிறார் என்று கேட்டிருக்க வேண்டும். கனிமொழி குட்டிரேவதிக்கு எதிராக வந்த விமர்சனங்களுக்கு எதிராக எழுதியும் உள்ளார். இருந்தும், இந்த மாதிரியான இடங்களில் பல பெண்கள் மௌனமாகவே இருந்து வருகிறார்கள். இந்த மாதிரியான தம்மை முன்னிறுத்தும் தன்மைகள் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. அப்படியான விமர்சனங்கள் ஆரோக்கியமான சூழலை உருவாக்கித் தரும்.

பொதுவாக, பெண்கள் சக பெண் படைப்பாளிகள் மீதான காட்டமான விமர்சனங்களை முன்வைப்பதையே ஆண்களும் ஊடகங்களும் விரும்புகின்றார்கள், சண்டைகளை விடுப்புப் பார்க்கும் ஒரு சுவாரசியத்துடன். இவற்றுள், பெண்கள் தெளிவாகவும் தீர்மானமாகவும் சிலவிடயங்களில் இருக்கவேண்டி இருக்கிறது, ஏனெனில் ஆண்களது வாதங்கள் கருத்து மோதல்களாகவும் பெண்களது விமர்சனங்கள் தனிப்பட்ட எரிச்சல்களாகவுமே பார்க்கப்பட்டு வருகிறது.