6/30/2005

Image hosted by Photobucket.com
தடுகளை அறுத்தெறிந்தேன்
முத்தங்கள் என்னை
தொந்தரவு செய்யாதிருக்கட்டும்
பிரியமான முத்தத்தில்
தளர்ந்து போகும் ஆன்மாவை
கொன்று போடுவது
அத்தனை சுலபமில்லை.
வெட்டியும் அறுத்தும் கடித்தும்
முத்தத்திற்கான எல்லா வழிகளையும்
அடைக்கிறேன்
இரத்தம் கசிய
சதைகள் தொங்க
வேட்கை ஒய்கிறது.

எனக்கு காதலும் காமமும்
காத்திருப்பும் வேண்டாம்

சண்டைகள் அற்று
ஓய்ந்த போதுகளில்
குற்றச்சாட்டுக்கள் தளர
முத்தமிட எத்தனிப்பாய்
உதடுகளே அற்ற அந்த முகம்
உன்னிடம்
விழுப்புண்களை உண்டாக்குகிறது
உன் வாழ்வில்
கொடும் சித்திரமாய்
உதடுகளற்ற அந்த ஓவியம்


துரோகத்தை சகிக்காது
முடியைத் துறந்து
வெஞ்சினம் தணித்தாள் ஃபிரீடா
தன்னையே அழித்து
பழிதீர்த்துக் கொண்டவள் சில்வியா
காதலுக்காக காதை இழந்தான்
பிரிய வான்கோ
நீ உணர்வாயா இவர்களின் தனிமை
என்னிடத்திலும் இருப்பதை?

வெறிகொண்ட ஆன்மா
இன்பத்தைத் தூண்டும்
எல்லா உறுப்புக்களையும்
அறுத்தெறிய முனைகிறது
~


நன்றி அற்றம் இதழ் 01/2005

6/24/2005

Image hosted by Photobucket.com
தொலைவில் கேட்கும் உன் குரலை
என் வீட்டுச் சாளரங்கள்
தடுக்கின்றன

கால்களை அகட்டி வைக்க இயலாத
வெள்ளைப் புதர்களுக்குள்
பாதங்கள் தாழ
இனங்காணத் தெரியாத
சில குரல்களுடன் தொடர்கின்றேன்

மேகங்களுக்குள் ஒளிந்து கொண்டு
ஏதோ ஒன்று அச்சமூட்டுகிறது
தனிமை நீண்டு
விரக்தியில் என் அகங்காரம்
அழுகையாய் வெடித்து
கேவலாய் அவ் ஒலி
காற்றில் கலக்கும்

அப்பொழுது
ஆழ்ந்த நேசத்தில் உருகும்
இடைவிடாத உனது தவிப்பை
என்னை அடைய விடாமல்
இச்சாளரங்கள்
தடுக்கின்றன.
~

(2000)
காலம், இதழ் 24, யூன் 2005

6/12/2005

Image hosted by Photobucket.com
நன்றி

நீண்டு கொண்டிருக்கிறது
ஒற்றையடிப்பாதை
தீராத மோகத்துடன்
பிணைந்து திரிந்த நானும் நீயும்
வெவ்வேறு தெருக்களில்
வெவ்வேறு காலநிலைகளில்

உன் நினைவில்
இந்த தெருக்களில்
மஞ்சள் மர இலைகளின் நிழலில்
அமர்ந்து கொள்கிறேன்
மெல்லிய சலசலப்பு
இனிய நினைவுகளுள்
இழுத்துச் செல்கிறது

இன்னமும்
நம்பிக்கைகளை தந்துகொண்டிருக்கிறது
உன்னிடமிருக்கும் இந்த வீட்டின்
திறப்புக்கள்.
அர்த்தமற்ற கணங்களில்
கிழித்துப் போட்ட எல்லாக் காகிதங்களும்
காதலால் உயிர் பெற்றுக் கொள்கிறது
இந்த ஊதா நிற சேலை
அந்த பச்சைக் கரை வேட்டி
நினைவுகளை அறுத்தெறிய
முடிகிறதா?

ஒவ்வொரு கணமுறிவிலும்
உயிர்ப்புற்று எழுகிறது
தூக்கிப் போட முடியாத 108 கணங்கள்
வீட்டுக்குத் திரும்பும்
ஒவ்வொரு பொழுதுகளிலும்
சந்தோசம் தருகிறது
நீ காத்திருக்கக் கூடும் எனும் பிரம்மை

வாழ்வும் காதலும்
பிரிவும் கூட
நம்பிக்கைகளால் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
~

24-02-2005
காலம் இதழ் 24, june/ 05